Friday, April 19, 2024

திரௌபதியம்மன் நவமணிமாலை



நேரிசை வெண்பா

குருதுரோணர் போரிட்டு துருபதனை வென்று
ஒருபாதி நாட்டைக்கைப் பற்ற - வருந்திய
பாஞ்சாலன் வாரிசு வேண்டி ஒருபெரிய
யாகம் நடத்து கிறான் 01

கலைகளில் வல்லவரான குரு துரோணாச்சாரியார் துருபதனோடு போரிட்டு வென்று நாட்டின் பாதியை அபகரித்துக் கொண்டதனால், துருபதன் வருத்தம் கொண்டு துரோணரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகொள்ள, தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று நினைந்து பெரிய யாகம் நடத்துகிறான்.

எண்சீர் விருத்தம்

நடந்துவரும் யாகத்தில் திருட்டத் துய்மன்
எனும்பெயரில் ஒருவீரன் தோற்றம் கொண்டான்
அடுத்ததாக யாகத்தீ விண்ணை முட்ட
மறுபடியும் ஓர்உருவம் தோற்றம் காண
விடைதெரியா யாவருமே ஆவ லோடு
காத்திருக்க கருநிறத்தில் பெண்ணொ ருத்தி
உடல்முழுதும் மணம்கமழ கண்டோர் நெஞ்சை
ஈர்க்கின்ற அழகோடு வெளியே வந்தாள் 02

அவ்வாறு நடத்தப்பட்ட யாகத்தில் திருட்டத்துய்மன் என்னும் பெயருடைய ஒரு வீரன் தோன்றுகிறான். அதன்பின்னர் யாகத் தீ வானுயரம் வளர அடுத்ததாக அத்தீயில் இருந்து மறுபடியும் ஓர் உருவம் தோன்றியது. ஆவலோடு என்ன நடக்கிறது என்று அனைவரும் வியப்பாகக் கண்டுகொண்டிருந்த நேரத்தில் கருநிறத்து அழகியாக, உடல் முழுவதும் நறுமணம் வீச, காண்பவர்கள் நெஞ்சத்தைக் கொள்ளைக் கொள்ளும் அழகோடு பெண்ணொருத்தி (பாஞ்சாலி) தீயிலிருந்து வெளியே வந்தாள்.

மண்டில ஆசிரியப்பா

ஆள்கின்ற அரசர்க்குச் செய்தி சொல்லி
ஆளான திரௌபதிக்கு மணமு டிக்க
துருபதனும் நாள்குறித்து போட்டி வைத்தான்
சுற்றிவரும் இலக்கினிலே அம்பை ஏய்தி
வெற்றிபெற்ற வீரனுக்கே மணமு டித்து
தன்மகளைக் கொடுப்பதாக உறுதி செய்தான்
மன்னவர்கள் பலர்வந்து முயன்ற போதும்
முடியாமல் தோற்றேதான் போனார் அங்கு
முடிவினிலே பாஞ்சாலன் நினைத்தாற் போல
அர்ச்சுனனே இலக்குதனை அம்பால் வீழ்த்தி
திரௌபதியை மணம்செய்து அழைத்துச் சென்றான். 03

திரௌபதிக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய துருபதன், போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதற்கான நாளையும் குறிப்பிட்டு நாடாளும் அரசர்களுக்கு எல்லாம் செய்தி சொல்லி அனுப்பினான். குறித்த நாளில் போட்டியும் நடைபெற்றது. அப்பொழுது துருபதன் மன்னன், மேலே சுற்றிவரும் இலக்கினை அம்பினால் வீழ்த்துவோருக்கேதன் மகளை மணம்முடித்துக் கொடுப்பதாகக் கூறினான். மன்னர்கள் பலரும் வந்து முயன்றனர். யாராலும் இலக்கினை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் பாஞ்சலன் நினைத்ததுபோல, அர்ச்சுனனே வெற்றி பெற்று திரௌபதியை மணம்முடித்துத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.

சிந்தடி வஞ்சிப்பா

சென்றவளின் கனவுகள் பலவாறிருக்க
கன்னியினை வெற்றிகொண்டு அழைத்துவந்தோம்
வந்துகாண வேண்டுமென்று வணங்கிநின்றார்
குந்தியவள் பெண்மகளைக் காணாது
ஐவருமேசம மாகப்பிரித்துக் கொள்என்றாள்

என்னசெய்ய

அன்னையவள் வார்த்தையைத் தலைகொண்டு
ஐவருமே மனையாளாய் ஏற்றுக் கொண்டார். 04

அர்ச்சுனனோடு சென்ற திரௌபதியின் கனவுகள் பலவாறாக இருக்க, போட்டியில் வெற்றிபெற்று கன்னியினை அழைத்து வந்துள்ளோம் வந்து காணுங்கள் என்று குந்தியிடம் கூறி வணங்கி நின்றனர். வழக்கம்போல் குந்தி, திரௌபதியைக் காணாமல் ஐவருமே சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினாள். என்ன செய்வது அன்னையின் வார்த்தையை மதித்து ஐவருமே மனைவியாக ஏற்றுக் கொண்டனர்.

குறளடி வஞ்சிப்பா

கொண்டாரெலாம் முற்பிறவியில்
எமன்வாயுஇந் திரன்அசுவினி
குமாரர்கள் ஆவார்கள்
திரௌபதியும் முற்பிறவியில்
இவ்வைவர்களின் மனைவியாவாள்

மேலும்

எனக்கு ஏற்றக் கணவரைத் தருகவென
ஐந்துமுறை சிவனிடம் வேண்ட
இப்பிறப்பில் ஆனார் கணவர் ஐவர் 05

திரௌபதியை மனைவியாகக் கொண்டவர்கள் எல்லோரும் முற்பிறவியில் எமன், வாயு, இந்திரன், அசுவினிகுமாரர்களாக இருந்தவர்கள். திரௌபதியும் முற்பிறவியில் இவர்களின் மனைவியாக இருந்தவள். மேலும், வேறொரு பிறவியில் திரௌபதி சிவனிடம் எனக்கு ஏற்ற கணவனைத் தருக என ஐந்து முறைக் கேட்டதனால் இப்பிறப்பில் ஐவருக்கும் மனைவியானாள்.

குறட்டாழிசை

ஐவருக்கு மனைவியான பாஞ்சாலி கற்புநெறி மாறாத
ஐவர்களுள் ஒருத்தியாக மதிக்கப் பெற்றாள் 06

தருமர் முதலாக ஐந்து பேருக்கு மனைவியாகிய பாஞ்சாலி, கற்பு நெறி மாறாத ஐந்து பெண்களுள் ஒருத்தியாக மதிக்கப் பெறுகிறாள்.

கலிவிருத்தம்

பெண்மகளும் கொண்டாரை அல்லாமல் மாற்றாரை
எண்ணத்தில் ஒருபோதும் நினைத்தாளில் லைசூதில்
பெண்வைத்து இழந்தாரை விட்டுவிட்டு துரியோதனன்
பெண்மகளை துகிலுரித்து அவமானப் படுத்தினானே. 07

திரௌபதியும் கணவனாகக் கொண்ட தருமர், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற இந்த ஐவரைத் தவிர ஏனையவர்களை ஒருபோதும் தன் மனதில் நினைத்ததில்லை. சூதாட்டத்தில் பெண்ணை அடமானப் பொருளாக வைத்திழந்த தருமர் முதலானவர்களை விட்டுவிட்டு, துரியோதனன் திரௌபதியை அவமானப் படுத்தினான்.

ஆசிரியத்தாழிசை

படுதுயரம் அடைந்தவளாய்ச் சபதம் ஏற்று
கொடியோரின் குருதியிலே தலைமு டித்து
விடைகொடுத்து வானுலகம் அனுப்பி வைத்தாள் 08

சபையில் அவமானப்பட்டு அடையக் கூடாத துயரங்களை அடைந்த திரௌபதி, கொடியவர்களான துரியோதனன் முதலானவர்களைக் கொன்று அவர்கள் இரத்தத்தைத் தலையில் தடவி என் கூந்தலை முடிப்பேன். அவர்களை இந்த மண்ணுலகத்தை விட்டு விண்ணுலகம் அனுப்பி வைப்பேன் என்று சபதம் செய்தாள்

கலித்தாழிசை

வையத்து மக்களெல்லாம் போற்றி வணங்கும்
கயல்விழியாள் பாஞ்சாலி நெஞ்சில் வைத்து
செய்துவரும் காரி யங்கள் வெற்றி யாகும். 09

இந்த உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் போற்றி வணங்கும் மீன்போன்ற விழிகளை உடைய பாஞ்சாலியைத் தன் உள்ளத்தில் வைத்து செய்கின்ற செயல்கள் அனைத்தும் வெற்றியாகவே முடியும்.

#திரௌபதியம்மன்_நவமணிமாலை

No comments:

Post a Comment