Wednesday, April 17, 2024

திருமால் இருபா இருபது



முதல் அவதாரம்

மீனாய் உருவெடுத்து மண்ணில் உயிரினங்கள்
தண்ணீரில் தோன்றின என்றுரைக்க–- மானிடர்கள்
அன்னை வயிற்றில் பனிக்குட நீர்நீந்தி
வந்தார் எனவுரைக்க ஒன்று.
 
ஒன்ற வதாரம் சொல்லும் செய்திகேள்
நான்கு முகத்து பிரம்மன் உறங்க
குதிரை முகத்து அரக்கன் ஒருவன்
வேதம் கவர்ந்து கடலுள் மறைத்தான்
திருமால் இதனை அறிந்த கொண்டு
கிருத மாலா ஆற்றில் ஒருசிறு
மீனாய்த் தோன்றி இருந்த தருணம்
பாண்டிய நாட்டு மன்னன் ஒருவன்
சத்திய விரதன் எனும்பெயர் கொண்டோன்
நித்தம் தவறா ஒழுக்க முடையோன்
நாரா யணனை மனதுள் நினைத்து
நீரை மட்டும் உணவாய் உண்டு
நீண்ட நாட்கள் கடுந்தவம் செய்து
தன்னிலை மாறா திருந்த காலை
ஒருநாள் அந்தி மாலைப் பொழுதில்
கிருத மாலா ஆற்றில் இறங்கி
தர்ப்பணம் செய்ய நீரை அள்ள
ஆற்று நீருடன் சிறுமீன் கண்டு
சிறிதும் தயங்கா ஆற்றில் போட்டான்
அரசன் முகத்தை அம்மீன் நோக்கி
இங்கு உள்ள எதிரிகள் என்னை
உண்டு விடுவர் என்னும் பயத்தில்
தப்பிக்க எண்ணி உன்கை அடைந்தேன்
காப்பாற் றென்று அம்மீன் கேட்க
தனது கமண்டல நீரில் போட்டு
தன்னுடை குடிலுக்கு விரைந்து வந்தார்.
இரவு முழுதும் கமண்டல நீரில்
இருந்த சிறுமீன் வளர்ந்து பெரிதாய்
கமண்டல அளவு வளர்ந்து விடவே
அம்மீன் எடுத்து பெரிய பாத்திரம்
ஒன்றில் போட பாத்திர அளவைத்
தாண்டி வளர்ந்தது குளத்தில் விட்டான்
குளமும் சிறுத்தது மடுவில் விட்டான்
மடுவும் சிறுத்தது சமுத்திரம் நோக்கி
எடுத்துச் சென்றான் இங்கு விடாதே
சமுத்திரம் மிகவும் கொடுமை யானது
திமிங்கலம் போன்ற மீன்கள் உண்டிடும்
என்று கூறவே வியப்பில் ஆழ்ந்த
மன்னன் நீயார் என்று வினவினான்
புன்சிரிப் புடனே நான்தான் உன்அரி
இன்று முதலா ஏழாம் நாளில்
அனைத்து உலகும் நீரில் மூழ்கும்
அன்றுநான் அனுப்பும் படகு ஒன்றில்
பறவை விலங்கு பல்லுயிர் உடனே
சிறந்த மூலிகை பல்வகை தானியம்
முனிவர் களுடனே நீயும் ஏறிடு
மீன்வடி வான என்னிடம் அந்த
படகு வந்து சேர்ந்திடும் திமிங்கலம்
வடிவில் இருக்கும் நானே என்னுள்
வாசுகி என்னும் பாம்பைக் கொண்டு
மாசு படாமல் படகைக் கட்டி
பிரளயம் முடியும் வரைநான் உம்மை
சிறப்புடன் காப்பேன் பயம்கொள வேண்டாம்.
என்று சொல்லி நீரினுள் மறைந்தார்
கண்ணும் கருத்தாய் காத்து கிடந்தான்
பகவான் சொன்ன நாளும் வந்தது
பகவான் சொன்னது போல நடந்தது
பிரளயம் முடிந்த பின்னர் திருமால்
வேதம் கவர்ந்த சூரனை மாய்த்து
வேதம் மீட்டு படைக்கும் தொழில்செய்
பிரம்மன் இடத்து தந்தார்
முற்று பெற்றது இந்தப் பிறப்பே.
 
இரண்டாம் அவதாரம்

பிறந்த குழந்தை சிலதிங்கள் செல்ல
புரண்டு கவிழும் நிலையுரைக்க - நீர்வாழ்
உயிர்கள் நிலம்நோக்கி வந்து இரண்டிலும்
வாழ்ந்தநிலை சுட்ட இரண்டு


இரண்டாம் அவதாரம் சொல்லும் செய்தி
துர்வாசர் என்னும் மாமுனி ஒருவர்
மிகுந்த சக்தியும் கோபமும் படைத்தவர்
வைகுந்தம் சென்று இந்திர உலகம்
காணும் பொருட்டு அங்கு வந்தார்
இந்திரன் தனது யானையில் அமர்ந்து
வந்திடக் கண்ட மாமுனி மகிழ்ந்து
தான்பெற்ற மாலையை அவனுக் களித்தார்
இடது கையால் அதனை வாங்கி
பிடரியில் வைத்தான் யானையின் மீதே
தன்தலை இருந்த மாலை எடுத்து
யானை காலில் போட்டு மிதித்தது
இதனைக் கண்ட முனிவரும் வெகுண்டு
மதிக்கவும் இல்லை வணங்கவும் இல்லை
செல்வச் செருக்கால் ஆணவம் கொண்டாய்
செல்வம் அனைத்தும் இல்லாது போகும்
இந்திர உலகம் இருண்டே போகும்
என்றே சாபம் அளித்துச் சென்றார்
முனிவர் இட்ட சாபத்தி னாலே
இந்திரன் முதலா தேவ கணங்கள்
செல்வத் தோடு தன்பலம் இழந்தனர்
வல்லமை இழந்த தேவர்க ளோடு
அசுரர்க் கூட்டம் தாக்குதல் நடத்தினர்
அசுர குருவாம் சுக்ராச் சாரியார்
தந்த சஞ்சீவி மந்திரத் தாலே
மாண்ட அசுரர்கள் மீண்டு எழுந்தனர்
இவ்வா றெழுதல் தேவர்க் கின்மையால்
தேவர்கள் எண்ணிக்கை குறைந்து போனது
இந்நிலை அறிந்த தேவேந் திரனும்
நான்முகன் அடைந்து உபாயம் கேட்டனன்
பிரம்ப தேவன் பகவான் இடத்து
விரைந்து அழைத்து நடந்ததைச் சொன்னார்
அனைத்தும் கேட்ட பகவான் தேவரீர்
அமிர்தம் எடுத்து பருகினால் ஒழிய
நமதுயிர் காக்கும் மருந்தொன் றில்லை
அதற்குப் பொறுமை காத்திட வேண்டும்
தகுந்த நேரம் வாய்த்திட வேண்டும்
பாற்கடல் கடைந்து அமிழ்தம் எடுக்க
வேற்றவர் துணையும் நமக்கு வேண்டும்
பக்குவ மாக அவருடன் பேசி
ஒத்துக் கொள்ள வைத்திட வேண்டும்
அமிழ்தம் கிடைத்த பின்னர் அவர்க்கு
எமது சூழ்ச்சியால் கிடைக்கா துசெய்வேன்
என்று தேவர்க்கு நம்பிக்கை தந்தார்
இந்திர னோடு தேவர்கள் எல்லாம்
அசுரர் தலைவனாம் பலியினை அணுகி
உசுப்பும் வார்த்தைகள் பலவாறு சொல்லி
உடன்பட செய்து ஒப்புதல் வாங்கினர்
கடைதல் எண்ணிய தேவரும் அசுரரும்
மந்தர மலையைத் தூக்கி வந்தனர்
தாங்க மாட்டா துயரம் கொண்டு
மலையைக் கீழே போட்டு விட்டனர்
மாலவன் மலையைத் தூக்கிச் சென்று
பாற்கடல் தன்னில் இறக்கி வைத்தார்
சுற்றும் கயிறாய் வாசுகி அழைத்து
தலையினை தேவர்கள் பிடித்துக் கொண்டு
வாலினை அசுரரைப் பிடிக்கச் செய்தனர்
பிறப்பு வீரம் பெருமை யுடையோர்
சிறப்பில் லாத வாலினை பிடிப்பதா˜
தகராறு செய்து மறுத்தனர் அசுரர்கள்
பகவான் தனக்குள் புன்னகை பூத்து
தலையினை நீங்களே பிடித்துக் கொள்க
விளைவுகள் அறியா அசுரர்க்குச் சொன்னார்
ஒத்துக் கொண்ட பின்னர் இருவரும்
முத்தாய்ப் பாக கடையத் தொடங்கினர்
மெல்ல அசைக்கத் தொடங்கிய உடனே
மலையும் மூழ்கி அசையாது நின்றது
காரணம் தெரியாது விழித்த காலை
பெரிய ஆமை வடிவம் தாங்கி
திருமால் மலையை முதுகில் தாங்கினார்
நீண்ட நேரம் மலையது சுழல
துன்பம் தாளா நிலையில் வாசுகி
வெளியே விட்ட நச்சுக் காற்று
தலைப்புறம் இருந்த அசுரரைத் தாக்க
தாங்க மாட்டாது கூக்குரல் இட்டனர்.
தங்களின் சிலரை இழந்து நின்றனர்
முன்பே அறிந்த பகவான் நகைத்து
தன்சூழ்ச்சி யாலே தலைபிடிக்க செய்தார்.
அசுரர் சூழ்ந்த நஞ்சை நீக்க
வசமாய் காற்று வீசச் செய்தும்
வான்மழை தந்தும் துன்பம் தீர்த்தார்
மீண்டும் கடையத் தொடங்கி நாள்பல
சென்றபின் ஆலகால கொடிய நஞ்சு
தோன்றி நாலா புறமும் பரவிட
தேவரும் அசுரரும் தெறித்து ஓடி
சிவனிடம் தஞ்சம் அடைந்து இந்த
நஞ்சில் இருந்து காக்க வேண்டினர்
தஞ்சம் புகுந்தாரைக் காப்பது மரபென
கொடிய நஞ்சை ஒன்று திரட்டி
போட்டு வாயில் விழுங்க நினைத்தார்
வயிற்றுள் சென்றால் உலகம் அழியும்
பயத்தில் பார்வதி நெஞ்சில் நிறுத்தினார்
அன்று முதலே திருநீல கண்டன்
என்ற பெயரைச் சிவனார் கொண்டார்
மீண்டும் துவங்கி பாற்கடல் கடைய
பால்தயிர் நெய்தரும் காம தேனு
உச்சைச் சிரவமெனும் வெள்ளை குதிரை
ஐரா வதம்எனும் வெள்ளை யானை
கற்பக தருவெனும் ஐந்து மரங்கள்
அறுப தாயிரம் அரம்பை யர்கள்
அகலிகை என்ற அழகான பதுமை
மதுரசம் பிரம்ம கமண்டலம் வாருணி
எனபல பொருளொடு திருமகள் வந்தபின்
தன்வந் தரிஎனும் உத்தம புருடர்
அமுத கலசம் தாங்கி வந்தார்
அமுத கலசம் கண்ட அசுரர்கள்
பிடுங்கி எடுத்து ஓடத் தொடங்கினர்
விடாது தேவரும் துரத்தி ஓடி
கிடைக்கா நிலையில் கண்ணனை நாடினர்
கிடைத்திட செய்வேன் வருந்திட வேண்டாம்
என்றுகூறி அழகிய மோகினி வடிவம்
கொண்டு பகைவர் தன்னை பார்க்க
குறுகுறு விழிகள் மயங்கக் காட்டி
பிரியம் மிகுந்த பெண்ணவள் போல
புன்னகை யோடு அவர்களை அணுகிட
தன்னிலை மறந்து பெண்நிலை கொண்டு
தன்கை அமிழ்தம் பெண்கை கொடுத்து
பங்கிடு என்று மயங்கி நின்றனர்
மோகினி உருவில் இருந்த கண்ணன்
தேவரும் அசுரரும் வரிசையில் அமர்த்தி
தேவர்க்கு மட்டும் கிடைத்திட செய்தார்
ஏமாற்ற மடைந்த பகைவர் வெகுண்டு
தாமத மின்றி சண்டைகள் செய்தார்
சாவா மருந்த உண்ட பலத்தால்
தேவரை அழிக்க முடியாமல் போனது
அரக்கரை வென்று ஆட்சியைக் கவிழ்த்தனரே,

மூன்றாம் அவதாரம்

கவிழ்ந்த குழந்தை கைகாலூன்றி மெல்ல

தவழ்ந்து நகரும் நிலையும் - புவிஉயிர்
நீர்நிலை விட்டுநிலம் வாழ்உயிராய் மாறும்
நிலையும் சொல்ல மூன்று


மூன்றாம் அவதாரம் சொல்லும் செய்தி
முன்னொரு காலத்தில் தவத்தில் சிறந்த
காசிப முனிவர் திதிக்கும் பிறந்த
பாசப் புதல்வர் இரணிய கசிவு
இரணி யாட்சகன் என்ற இருவர்
இரணி யாட்சன் நான்முகன் நோக்கி
தவமிருந்து எந்த ஆயுதத் தாலும்
தேவர் அசுரர் யாவ ராலும்
மரணம் ஏற்படக் கூடா தென்று
வரங்கள் பெற்று பலசாலி யாகி
தேவர்களை ஒன்று திரட்டி கொடூர
அவன்முகம் காட்டி பயம்கொள வைத்தான்
பயத்தில் அவர்கள் மறைந்து வாழ்ந்தும்
ஓய்வில் லாமல் தொல்லைகள் செய்தான்
ஆணவம் மிகுந்து வருண னிடத்து
தன்வலி கொண்டு தாக்குதல் நடத்த
போரில் வெல்ல முடியா தென்று
வருணன் உணர்ந்து அசுர முதல்வனே
உன்வலிமை கண்டு பாராட்டு கின்றேன்
தினவு எடுத்த உன்தோள் களுக்கு
உணவு படைக்க நாராயணன் ஒருவரால்
மட்டுமே முடியும் அவரோடு போரிடென
மூடனை திசைமாற்றி தப்பித்துக் கொண்டான்
இதனைக் கேட்ட இரணி யாட்சன்
கதையைச் சுழற்றி போரொளி இட்டு
அரியைத் தேடி வைகுந்தம் சென்றான்
நாரதர் வழியில் எதிர்பட்டு அசுரத்
தலைவனே உன்னிடம் கொண்ட அச்சத்தால்
ஒளிந்து கொண்டனர் தேவர்கள் யாவரும்
எங்கே இப்போது செல்கிறாய் என்றார்
சங்கேந்தும் அரிதேடி வைகுந்தம் செல்கிறேன்
என்தோள் வலிமைக்கு தீனிபோட போர்செய்ய
என்று சொல்லி நகர்ந்தான்இரணியாட்சன்
நல்ல காரியம் செய்யப்போ கிறாய்ஆனால்
இல்லை அங்கே பரந்தாமன் அவரோ
தண்ணிர் மூழ்கிய பூமியை வெளியே
கொண்டுவர பாதாள உலகம் சென்றுள்ளார்
இந்த சேதி கேட்ட அரக்கன்
அங்கே சென்று அவனோடு போரிட்டு
வென்று வருவேன்என்று பாய்ந்து
பாதாள உலகம் அடைந்தான்அங்கே
வேதம் போற்றும் பகவான் வெள்ளை
வராக உருவம் கொண்டு தனது
கோரப் பற்களால் பூமியைத் தாங்கி
மேலே தூக்கிக் கொண்டி ருந்தார்
கோலம் பார்த்த அரக்கன்சிரித்தான்
இந்தப் பன்றியா என்னை வெல்லும்
என்றுதன் கதையால் அடிக்க ஓங்கினான்
இதனைக் கண்ட வராக மூர்த்தி
கதையை தம்இடக் காலால் தட்டிவிட்டு
போரிட ஆயத்தம் காட்டி நின்றார்
பேரிடர் நடக்குமே என்று அஞ்சி
பிரம்மாதி தேவர்கள் அண்ட சராசரங்கள்
பார்த்துகிடு கிடுத்தனஅசுரன் கதைதூக்கி
வைகுந்த வாசனின் மேலே வீச
சக்கரா யுதத்தால் அதனை அழித்தார்
மலையோடு மலைமொதும் காட்சி போல
மலைவாசன் இரணியாட்சன் மோதிக் கொண்டனர்
அந்நேரம் நான்முகன் அரியைப் பார்த்து
சந்தியா காலம் நெருங்கு வதற்குள்
கொன்றுவிடு என்று கூக்குரல் விடுத்தார்
இரணியாட்சன் காதோரம் ஓங்கி அடிக்க
இரத்தம் கக்கி மரம்போல்சாய்ந்தான்
வராக மூர்த்தி பூமியைத் தூக்கி
நீரில் மூழ்காது நிறுத்திக் காத்தார்.
இந்தப் பூமியில் மனிதகுலம் தழைக்க
மனுவை அழைத்து சத்துரு பாவுடன்
கணவன் மனைவியாய் வாழ்ந்து தங்கள்
இனத்தை விருத்தி செய்யுங்கள் என்றார்
நான்முகன்இவ்விரு வருக்கும் இரண்டு
ஆண்களும் மூன்று பெண்களும் பிறந்தனர்
இவர்களும் இவர்கள் வழித்தோன் றலுமே
மண்ணில் தோன்றிய ஆதி மனிதர்கள்.

நான்காம் அவதாரம்

மனித குணமும் மிருக குணமும்
இணைந்து இருப்பதைச் சொல்ல - உருவில்
விலங்கி லிருந்து மனிதஇனம் தோற்றினது
சொல்ல எடுத்தது நான்கு


நான்காம் அவதாரம் சொல்லும் செய்தி
மாற்றார் அழிக்க முடியா தளவு
பெற்றிட வேண்டும் வரமென் றெண்ணி
மந்தர மலைக்குச் சென்று அங்கு
தன்கால் கட்டை விரலை மட்டும்
நிலத்தில் ஊன்றி நீண்ட நாட்கள்
உலகம் வியக்க கடுந்தவம் செய்தான்
சோதனை பலவும் கடந்த பின்னர்
வேதனை தீர்க்க வேண்டு மென்று
எலும்புக் கூடாய் இருந்த அவன்மேல்
வலுஉடல் பெறவே தீர்த்தம் தெளித்து
வேண்டிய வரம்கேள் என்று பணித்தார்
கண்டு மகிழ்ந்து பலவாறு துதித்து
வெளியிலோ வீட்டிலோ பகலிலோ இரவிலோ
விலங்கு மனிதர் தேவர் அசுரர்
என்று யாவ ராலும் மரணம்
எனக்கு ஏற்பட கூடா தென்றும்
மூன்று உலகும் நானாள வேண்டும்
என்றும் வரங்கள் வேண்டிப் பணிந்தான்
கேட்ட வரத்தால் பிரம்ம தேவர்
திடுக்கிட்டு வேறு வழியின்றி வரம்தந்தார்
வரங்கள் பெற்ற இரணிய கசிபு
கருணை இலாது கொடுமைகள் செய்தான்
உலகில் உள்ள தேவர் முதலா
பலவகை யோரை பலவாறு வென்று
மூன்று உலகையும் தனதாக்கி கொண்டு
இந்திர உலகம் காடு மலையென
அனைத்தும் அவனது கட்டுப் பாட்டுக்குள்
கொண்டு வந்து துன்பங்கள் செய்தான்
துன்பம் தாங்காத் தேவர்க் கூட்டம்
கண்ணனை நினைந்து போக்கிட வேண்டினர்
அஞ்ச வேண்டாம் அபயம் காப்பேன்
பிஞ்சுக் குழந்தை பிரகலாதன் மிஞ்சும்
என்பால் பக்தி கொண்டவன் அவன்வழி
கொன்று துன்பம் தீர்ப்பேன் என்றார்
இரண்யன் பிள்ளைகள் நால்வரில் ஒருவன்
பிரகலாதன் கல்வி கேள்வியில் சிறந்தவன்
உதவும் இயல்பும் பணிவும் கொண்டவன்
சுதர்சனன் பெயரை கருவில் இருந்தே
உச்சரித்து வருபவன் பெரியோரை மதிப்பவன்
இரணிய கசிபு சுக்கிராச் சாரியர்
மகன்கள் இருவரை குருவாய் தனது
மகன்களுக்கு இருந்து கற்றிட செய்தான்
கண்ணும் கருத்தாய் பிள்ளைகள் கற்றனர்
அன்பு பொங்க ஒருநாள் இரண்யன்
நான்கு பிள்ளையுள் செல்லப் பிள்ளையாம்
பிரக லாதனை தன்மடி அமர்த்தி
சிரம்தடவி நலம்பல பேசி கருத்தாய்நீ
கற்றதில் பிடித்தது எதுவெனக் கேட்டான்
பெற்ற தந்தையே பெருமைபடச் சொல்வேன்
திருமால் ஒருவரே என்உளம் கவர்ந்தவர்
விரும்பி துதிப்பேன் தினமும் அவரை
உலகில் உயர்ந்தவர் யாரெனக் கேட்டால்
எல்லா நிலையிலும் அவரெனச் செல்வேன்
என்ற பதிலை இரணியன் கேட்டு
தனக்கெதி ராக யாரோ ஒருவர்
குழந்தையின் மனதைக் களைத்து விட்டனர்
அவர்யார் என்று கற்றுத் தந்த
ஆசிரியர் கண்டு கோபம் கொண்டான்.
ஆசான் இருவரும் நடுங்கிய படியே
நாங்கள் இதனைப் போதிக்க வில்லை
தானே கற்றுக் கொண்டான் என்றனர்
மீண்டும் மீண்டும் திருமால் பெயரை
தன்மகன் வாயால் கேட்ட இரண்யன்
ஏவல் ஆட்களை அருகே அழைத்து
காவல் காத்து கொடுமைசெய பணித்தான்
கூரிய ஆயுதம் கொண்டு தாக்கினர்
நாரண மந்திரம் அவனைக் காத்தது
யானையைக் கொண்டு கொல்லச் செய்தனர்
யானை ஒன்றும் செய்ய வில்லை
பாம்புகள் விட்டுக் கடிக்கச் செய்தனர்
பாம்பின் விஷமும் ஏறாது போனது
மலையில் இருந்து கீழே எறிந்தனர்
மலைத்தனர் உயிருடன் இருப்பது கண்டு
பல்வேறு முயற்சிகள் பலனின்றி போனதால்
பலநாள் உணவுநீர் ஏதும் இன்றி
இருட்டு அறையில் அடைத்து வைத்தனர்
இருந்தும் நலமாய் இருக்கக் கண்டனர்
ஏவல் ஆட்களை நம்பி டாமல்
அவனே துன்பம் தந்திட நினைந்து
பாறை ஒன்றைக் கொண்டு வந்து
பிரக லாதனைச் சேர்த்துக் கட்டி
படகு மூலம் கொண்டு சென்று
கடலுள் தூக்கி வீசி எறிந்தான்
தெப்பம் போல பாறை மிதந்து
காப்பாற் றியது அவனது பக்தி
இதனைக் கண்ட இரணிய கசிபு
இதற்கு மேலென்ன செய்வ தென்று
புரியாமல் விழித்து ஆலோசனை நடத்தி
சிறிது காலம் சென்றால் மாறுவான்
அதற்குள் ளாக அவனது மனதை
அர்த்தம் காமம் ஆசை என்பன
கற்றுத் தந்து உலக இன்பத்தில்
பற்று கொள்ளச் செய்து மாற்றுங்கள்
என்று இரணியன் அனுப்பி வைத்தான்
மன்னனின் சொல்படி செய்தனர் குருமார்
ஒருநாள் ஆசிரியர் வெளியில் சென்றகாலத்து
சிறுவர் அனைவரும் ஒன்றுகூடி விளையாடினர்
விளையாட்டில் விருப்பம் இல்லா பிரகலாதன்
விளையாடும் சிறுவரை அருகே அழைத்து
ஞானமும் பக்தியும் உபதேசம் செய்து
மானிட பிறவி கிடைத்தற் கரிது
இந்தப் பிறவியை வீணாக்க வேண்டாம்
சிந்தையில் அரியின் நாமம் துதித்து
சரணடைந்தால் இறவாப் பேறு பெற்றிடலாம்
நாரா யணனே நற்கதி அளிப்பவன்
என்று பலவாறு எடுத்துச் சொல்ல
சிறார்கள் அதனைக் கேட்டு விளையாட்டை
மறந்து பகவா னிடத்து பக்திகொண்டு
நித்தம் நித்தம் அரியின் நாமம்
ஒத்தக் குரலில் மந்தி ரம்போல்
சொல்ல ஆசிரமமே மாற்ற மடைந்தது
எல்லாம் கண்ட ஆசி ரியர்கள்
அஞ்சி நடுங்கி இனியும் தாமதித்தால்
மிஞ்சாது உயிரென்று விரைந்து இரணியன்பால்
அரசே பிரகலாதன் மாற வில்லை
மாற்றம் அடைந்தனர் ஆசிரம குழந்தைகள்
எங்கள் போதனை வீணாகிப் போனது
உங்கள் மகனை மாற்றுதல் எளிது
என்று பயந்து நடுங்கிக் கூறினர்.
பொங்கி எழுந்து இரணிய கசிபு
மாற்றான் பெயரை உச்சரிப் பவனை
விரைந்து இங்கு அழைத்துவா என்றான்
அரண்மனை வந்த பிரக லாதன்
தந்தையை வணங்கி பணிவோடு நின்றான்
சிந்தை இழந்த அறிவிலி மூடா
என்னைக் கண்டால் மூவுலகும் நடுங்கம்
என்பெயர் மட்டும் உச்சரித்து வணங்கும்
எனது கட்டளையை நீயேற்க மறுத்தால்
கொன்று விடுவேன் என்று உரைத்தான்
அனைத்தும் கேட்ட பிரக லாதன்
புன்சிரிப் புடனே பேசத் தொடங்கினான்
தந்தையே வைகுந்த நாதரே உனக்கும்
எனக்கும் ஏன்இந்த உலகில் உள்ளோர்க்கும்
பரம்பொரு ளானவர் உலகை ஆள்பவர்
பிறப்பு இறப்பு இன்பம் துன்பம்
அனைத்தும் அவரால் மட்டுமே நிகழும்
என்று தந்தைக்கும் உபதேசம் தந்தான்.
பேரறிஞன் போன்று உபதேசம் செய்யும்
மூடனே உனக்கு மரணகாலம் நெருங்கி
விட்டது ஆகவேதான் என்னிடம் இப்படி
எதிர்த்து பேசுகின்றாய் மூன்று உலகிற்கும்
அதிபதி நானா அந்த அரியா
அப்படி என்றால் அவன்எங்கே இருக்கிறான்
இப்போதே சொல்என்று கூச்ச லிட்டான்
அஞ்சாமல் அமைதியாக பாலகன் சொன்னான்
தந்தையே சகல உயிர்களுக்கும் அதிபதியாய்
இருக்கும் அந்த பகவான் எங்கும்
இருக்கிறார் அவர்இல்லா இடமே இல்லை
என்று பணிவாய் பதிலைப் பகர்ந்தான்
என்னை விடவும் இந்த உலகில்
வேறொருவன் அதிபதியாய் இருக்கிறான் என்றாய்
எங்கு இருக்கிறான் எப்படி இருக்கிறான்
இந்தத் தூணில் இருக்கிறானா˜ சொல் உன்னைக்
கொன்றால் வந்து காப்பாற்று கிறானா
பார்ப்போம் என்று அருகில் இருந்த
பெரிய தூணைஓங்கி அடித்தான்
அப்போது அந்தத் தூணிலிருந்து பயங்கர
சப்தம் வெளிப்பட்டு உலகெங்கும் கேட்க
பிரம்மாதி தேவகளும் அசுரர்களும் நடுங்கினர்
இரணியன் காரணம் அறியாது மிரட்சியுற்றான்
அந்த நேரம் பிரகலாதன் கூற்றை
உண்மை யாக்க தூணில் இருந்து
மனித உடலும் சிங்க முகமும்
கொண்ட நரசிங்கர் உருவம் கண்டு
இரணிய கசிவு நெஞ்சில் பயம்கொண்டான்
எனினும் நான்பெற்ற வரங்கள் முன்னால்
என்னை யாரென்ன செய்யமுடியும் என்று
நரசிங்க மூர்த்தியோடு போரிட்டான் எனினும்
பரம்பொருள் முன்னால் இரணிய கசிபால்
ஒன்றும் செய்ய முடிய வில்லை
தன்னுடைய கைகளால் அவனைப் பிடித்திழுத்துக்
கொண்டு வாயிற் படியின் அருகில்
சென்றார் வீட்டிலும் வெளியிலும் தனக்கு
மரணம் நேரக் கூடாது என்று
வரம்பெற் றிருந்ததால் வாயிற் படியடைந்தார்
பூமியிலும் ஆகா யத்திலும் மரணம்
தமக்கு ஏற்படக் கூடாது என்ற
வரத்தால்தன் தொடையில் வைத்துக் கொண்டார்
இரவிலும் பகலிலும் மரணம் ஏற்படா
வரத்தால் அந்தி மாலைப் பொழுதில்
எந்த ஆயுதமும் இல்லா மலேயே
தன்கை நகத்தால் உடல்கிழித்து குடல்மாலை
அணிந்து இரணிய வதம்செய்தார் சிம்மரே

ஐந்தாம் அவதாரம்

நரனாய்நாற் கால்களிலி ருந்திரண்டு கால்களில்
நேர்நின்ற குள்ள மனிதன் - அறிவுத்
திறனாற்றல் பெற்று வளர்ந்த நிலையை
யுரைக்க எடுத்தது ஐந்து


ஐந்தாம் அவதாரம் சொல்லும் செய்தி
சிந்தையில் நிறுத்தி தெளிந்திடு வீரே
பிரகலாதன் பெயரனும் விரோசனன் மகனும்
அரக்கர்கள் தலைவனும் ஆனவன் மகாபலிமுற்
பிறவியில் எலியாய் பிறந்து சிவன்கோவில்
பிரகா ரத்தில் சுற்றித் திரிந்துவந்தான்
ஒருநாள் நெய்வாசம் கண்டு கர்ப்ப
கிரகத்துள் நுழைந்து நெய்யுண்ணஅணையும்
நிலையில் இருந்த திரியின் மீது
எலியின்வால் தற்செய லாகப் பட்டு
தூண்டப் பட்டுச் சுடர்விட்டு எரிந்தது
தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்ததாலிப்
பிறப்பில் அரசனாகப் படைக்கப் பட்டான்
பாற்கடல் அமிழ்தம் உண்டு அழியாநிலை
கொண்ட தேவர்கள் அசுரர்களைத் தாக்கினர்
இந்திரனும் பலியின் தந்தையான விரோசனன்
படையைத் தோற்கடித்து அவனைக் கொன்றான்
இடைவிடாது இப்போர்கள் நடந்தவண்ணம் இருந்தன
தந்தை இறந்த பிறகு மகாபலி
இந்திர னோடு போரிட்டு தோற்று
மூர்ச்சை யாகி பின்னர் அசுர
குருவின் உதவியால் உயிர்பெற் றெழுந்தான்
தான்பெற்ற தோல்வி உள்ளத் துள்ளே
நீங்காது நீறுபூத்த நெருப்பாய் இருக்க
பலியின் கவலை தீர்க்க எண்ணிய
குலகுரு வான சுக்கிராச் சாரியார்
பிருகு வம்சத்து அந்தணர் துணையுடன்
சிறந்த விசுவசித் யாகம் நடத்திட
ஆணை யிட்டார் மாபலியும் குருவின்
ஆணையை ஏற்ற வேள்விசெய்தான் அந்த
வேள்வியில் இருந்து பொன்தேர் குதிரைகள்
வெளிவந்தது அத்தேரில் எண்ணில் அடங்கா
வில்லும் அம்பும் கவசமும் இருந்தன
பலியின் தாத்தா பிரகலாதன் தோன்றி
என்றும் வாடாத மலர்மாலை தந்தார்
தன்குரு சங்கு ஒன்றைக் கொடுத்தார்
யாகத்தின் மூலம் பிருகு அந்தணர்கள்
சக்ரவர்த்தி மகாபலிக்கு புதுபலம் தந்தனர்
பின்னர் பொன்தேரில் யாகத்தில் தோன்றிய
வெண்குதி ரைகளைப் பூட்டினான் பாட்டன்
தந்த வாடாமலர் மாலையைச் சூடினான்
சங்கைக் கையில் ஏந்தினான் அம்பறாத்
தூணி வில்வேல் கவசம் தாங்கினான்
சேனாதி பதிகள் தேரைச் செலுத்த
அசுர சேனையோடு தேவலோகம் சென்றான்
இந்திரனின் அமராவதி பட்டணத்தின் நாற்புறமும்
தனது படைநிறுத்தி போர்சங்கை ஊதினான்
போரொலி கேட்டு தேவர்கள் நடுங்கினர்
விரைந்து குலகுரு பிரகஸ் பதியிடம்
சென்ற இந்திரன் என்பழைய எதிரி
மீண்டும் படையெடுத்து வந்துள்ளான் அவனுக்கு
இத்தகு தைரியம் வழங்கியது யார்என்று
சித்தம் கலங்கிய நிலையில் கேட்டான்
இந்திரா! பிருகு வம்சத்து அந்தணர்
தந்த பலமும் சுக்கிராச் சாரியார்
அனுகிரகம் கொண்டு இங்கு வந்துள்ளான்
தற்போது அவனோடுஎதிர்த்து போரிட்டு
வெற்றி கொள்வது இயலாத ஒன்று
நாராயணன் ஒருவரால் மட்டுமே அவனை
வெற்றி கொள்ளவோ அடக்கவோ முடியும்
ஆகவே நீயும் உன்னைச் சார்ந்த
சகதே வர்களும்வேறிடம் செல்லுங்கள்
சிறிது காலம் சென்றதும் பகவான்
உரிய நேரத்தில் அவனை அடக்குவார்
பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற
குருவின் வார்த்தை கேட்ட இந்திரனும்
தேவர்களும் வேற்றுரு கொண்டு மறைந்தனர்
தேவரில்லா உலகைக் கைப்பற்றி ஆளத்
தொடங்கினான் இந்திரனின் நிலையை அறிந்த
அவன்தாய் அதிதி மிகுந்த வேதனையும்
கவலையும் கொண்டு தன்கணவர் காசிப
முனிவரிடம் முறையிட்டாள் ஆறுதல் கூறி
உன்குறை நீங்க வேண்டும் என்றால்
மாயவனை பூசித்து குறைகளைச் சொன்னால்
தாயான உனக்கவன் உபாயம் சொல்வான்
என்று வழிபடும் முறைகளையும் கூறினார்
கணவரின் சொல்லை ஏற்று அதிதி
பன்னிருநாள் நோன்பு இருந்தாள் அவள்முன்
சங்கு சக்கரம் கதையுடன் தாமரை
தாங்கி பகவான் தோன்றி உன்கவலை
நானறிவேன் உனது வயிற்றில் மகனாகத்
தோன்றி சொர்க்கம் மீட்டுத் தருவேன்
என்று ஆறுதல் கூறி அனுப்பிவைத்தார்
மாதம் பத்து கடந்ததும் காசிபர்
அதிதியின் மகனாய் வாமனர் அவதரித்தார்
மாயவன் வாமன னாக அவதாரம்
செய்த காலத்தில் மகாபலி பூமிவந்து
சிறப்போடும் செழிப்போடும் ஆட்சி நடத்தி
நாட்டுமக்கள் யாவரும் மகிழ்ச்சியாய் வாழச்செய்தான்
நாட்டுக்கும் மக்களுக்கும் நற்காரியம் பலசெய்து
எல்லோரும் வியந்து போற்றும் வண்ணம்
பல்வகை தான தருமங்கள் செய்து
தானத்தில் சிறந்தவன் அவனன்றி வேறில்லை
என்று எண்ணும் அளவிற்கு ஆட்சிசெய்து
மக்கள் நலமே அவன்நலம் என்றிருந்தான்
சுக்ராச் சாரியார் அத்தரு ணத்தில்
அந்தண வந்து யாரென்ன கேட்டாலும்
எந்த நிலையிலும் மறுத்திட வேண்டாம்
அவ்வாறு இல்லை என்று கூறினால்
இவ்வளவு நாள்நீ செய்த தான
தவப்பயன்கள் தடைபட்டுப் போகும் என்றார்
அந்நாள் முதல்அந் தணர்க்கு இல்லை
என்று சொல்லாமல் கொடுத்து வந்தான்
இதனை நன்கு அறிந்த வாமனர்
மகாபலி நர்மதை ஆற்றின் வடகரையில்
அசுவ மேதயாகம் செய்வது கேள்வியுற்று
சிசுபோல் ஒருகையில் மரக்குடையும் மறுகையில்
கமண்டலமும் தாங்கிய அந்தணச் சிறுவனாய்
அமைதியாய் அடிமேல் அடிவைத்த யாகசலை
வந்தடைந்தார் வரவு கண்டு அகம்மகிழ்ந்து
வந்தாரை எதிர்நோக்கி அழைத்துச் சென்று
ஆசனத்தில் அமர வைத்து மகாபலி
பேசத் தொடங்கினார் தவசீலரே உங்கள்
வரவால்நான் மகிழ்ந்தேன் எம்குலமும் புனிதம்
பெற்றது தங்களுக்கு வேண்டியது கேளுங்கள்
என்று கூறி பணிந்து வணங்கினான்
எண்ணற்ற தானங்கள் செய்து புகழ்பெற்ற
பலியே பிரகலாதன் பெயரன் என்பதைக்
வெளிப்படுத்தி விட்டாய் இரந்து வருவோர்க்கு
இல்லைஎனச் சொல்லாத பெருமை உங்கள்
குலத்திற்கு உண்டு உன்தந்தை விரோசனன்
அந்தண வேடம் தாங்கிவந்த தேவர்க்கு
தன்னுடைய ஆயுளை வழங்கினார் அத்தகு
வள்ளல் குலம்உதித்த உம்மிடம் என்சிறு
காலடியால் மூன்றடி நிலம்மட்டும் போதும்
வேறொன்றும் வேண்டாம் என்றார் வாமனர்
சிறுநிலம் கேட்ட அந்தணச் சிறுவனைக்
கண்டு என்னிடம் மிகச்சிறிய தானத்தை
வேண்டுகின்றீர் என்னிடம் வந்து யாசித்தவர்
மற்றவரிடம் சென்று யாசிக்கா வண்ணம்
பெரும்பொருள் வழங்குபவன் யான்அப்படி இருக்க
தங்களின் சிறுகாலால் மூன்றடி நிலம்மட்டும்
தந்தால் போது மென்றீர் அருள்கூர்ந்து
வாழ்நாள் முழுவதும் சுகங்கள் பெற்று
வாழ தேவையான பொருளைக் கேளுங்கள்
என்று வேண்டி பணிந்துநின்றான் மகாபலி
நடக்கப் போகும் செயல்யா தெனஅறியா
கேட்கும் மகாபலி பேசியது கேட்டு
வாமன வடிவம் தாங்கிய பகவான்
தமக்குள் சிரித்துக் கொண்டு பலியே
உன்வார்த்தைக் கேட்டு மகிழ்ந்தேன் இருப்பினும்
நான்தே வைக்குமேல் ஆசைபடா அந்தணன்
ஆகவே நான்கேட்ட நிலம்மட்டும் தந்தால்
அகம்மகிழ்வேன் என்றார் அதற்குமேல் ஒன்றும்
பேசாமல் பலியும் சம்மதம் தெரிவித்து
யாசகம் கொடுக்க வாமனரை வலம்வந்து
வணங்கி சுவாமி தாங்கள் விரும்பிய
மண்ணைத் தருகிறேன் பெற்றுக் கொள்ளுங்கள்
என்று தாரைவார்த்துக் கொடுக்கும் பொருட்டு
கிண்டியைக் கையில் எடுத்து நீர்வார்க்க
அனைத்தும் அறிந்த சுக்கிராச் சாரியார்
வண்டாய் மாறி கிண்டியின் நீர்துவாரம்
அடைத்து கொடுக்க விடாமல் தடுத்தார்
திட்டம் அறிந்த பகவான் அருகில்
இருந்த அருகம்புல் எடுத்து துவாரத்தில்
விரைந்து குத்த அரச குருவின்
ஒருகண் குருடாகிப் போனது கிண்டியில்
இருந்து நீர்வெளி வந்ததும் மனைவி
நீர்வார்க்க மகாபலி தாரை வார்த்தான்
பெருமை மிகுந்த செயலிலைச் செய்து
அந்தணர் குலத்தி லகமே உம்காலடி
கொண்ட மூன்றடி நிலத்தை உமக்கு
தானம் செய்கிறேன் பெற்றுக்கொள் என்றான்
தன்முகம் மலர்ந்த நிலையில் பகவான்
இருக்கையில் இருந்து எழுந்தார் அப்போது
உருவில் சிறுத்த வாமனன் வளர்ந்து
பேருரு கொண்டு வானள வுயர்ந்து
ஓரடியை பூமியிலும் மற்றோர் அடியை
விண்ணிலும் வைத்து வானுலகம் மண்ணுலகம்
எனஇரண்டு உலகையையும் தனதாக்கிக் கொண்டு
மூன்றாம் அடியை எங்கே வைப்பது
என்று கேட்டார் அதற்கு கொடையில்
சிறந்த மகாபலி உருவில் சிறுத்து
பெரிதாய் வளர்ந்த அந்தணச் சிறுவனே
என்தலையில் உங்கள் மூன்றாம் அடிவைத்து
தனதாக்கிக் கொள்ளுங்கள் என்று மகிழ்ந்தார்.

ஆறாம் அவதாரம்

மகிழ்ச்சியாகக் காட்டில் உலவினான் என்பதும்
நாகரீ கத்தின் முதற்படி - யாக
மனிதன்தன் தேவைக்கு ஆயுதம் கைக்கொண்டான்
என்பதும் உரைத்திடும் ஆறு


ஆறாம் அவதாரம் சொல்லும் செய்தி
பிராமண இனத்தில் சமதக்கினி முனிவர்
ரேணுகா தேவி பெற்றெ டுத்த
ஐந்தாம் மகனே ராமபத்ரா என்பவர்
பரமசிவன் நோக்கி கடுந்தவ மிருந்து
பரசு என்னும் கோடரி பெற்றதால்
பரசு ராமரென அழைக்கப் பட்டார்
மறைநான்கும் கற்ற விற்பன்னர் சமதக்கினி
கற்பில் சிறந்தவள் ரேணுகா தேவி
இருவர் அன்பும் சமநிலை யானது
வைகலும் கணவர் துயிலெழும் முன்னர்
சக்திமிகு ரேணுகா துயிலெழுந்து வாசல்
சுத்தம் செய்து மாக்கோல மிட்டு
நித்தம் கணவர் பாதங்கள் தொட்டு
வணங்கிய பின்னர் கங்கைக் கரையடைந்
தந்த ஆற்றில் நீராடி ஆதவன்
தொழுது ஆற்று மணலைத் தம்முடை
அழகிய கைகளால் பிசைந்தெ டுத்து
ஒருகுடம் வடிவமைப்பால் அவள்கரம் பட்டதும்
ஆற்றுமணல் களிமண்ணாய் மாறி குடமாக
உருவெ டுக்கும் அத்தகு கற்பு
சிறப்பு மிக்கவள் ரேணுகா தேவி
அம்மணல் குடத்தில் நீரெடுத்து வந்து
தம்கணவர் வழிபாட்டிற் குதவுவது வழக்கம்
ஓருநாள் ஆற்றங் கரைசென்று அங்கு
நீராடி மணல்கொண்டு பானை செய்ய
மணலை அள்ளிய அத்தருணம் அந்நீரில்
வானிருந்து ஓருநிழல் தென்பட யாரென
வான்னோக்கி தனது பார்வை செலுத்தினாள்
வான வீதியில் சித்திர ரதனெனும்
கந்தர்வன் செல்வது கண்டு மெய்மறந்தாள்
தன்சிந்தை கலங்கிய நிலையில் மீண்டும்
மணலெ டுத்து பானை செய்திட
மண்குடம் அப்போது உருவாக வில்லை
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள்
எந்தப் பலனும் கிட்ட வில்லை
காரணம் அறியா ரேணுகா தேவி
வருத்தம் மிகுந்து மனச்சோர்வு அடைந்தாள்
சமதக்கினி முனிவர் விழித் தெழுந்து
தம்வழி பாட்டிற்கு தண்ணீர் கொண்டுவர
சென்றவள் இன்னும் காண வில்லை
என்று தம்சிந்தையில் நடந்ததை அறிந்தார்
பத்தரை மாத்துத் தங்கமான தனது
பதிவிரதை கந்தர்வன் ஒருவனால் கற்பில்
களங்கம் ஏற்பட்டதை அறிந்து கொண்டார்
பிள்ளைகள் ஐவரையும் அழைந்து நதிக்கரைச்
சென்று உங்கள் அன்னையின் தலையை
துண்டித்து வாருங்கள் என்று பணித்தார்
அன்னையைக் கொல்வது பாவ மென்று
முன்பிறந்த பிள்ளைகள் தயங்கி நின்றனர்
தந்தை சொல்மிக்க மந்திர மில்லை
என்று மறுப்பேச் சின்றி பரசு ராமர்
ஆற்றங் கரைசென்று அழுது கொண்டு
இருந்த அன்னையின் தலையை வெட்டினார்
தந்தை சொல்ஏற்கா சகோதரர் களையும்
கொன்று தந்தையைப் பணிந்து நின்றார்
பிள்ளைகள் நால்வரும் செய்யாத காரியம்
செய்தவன்நீ உனக்கு என்னவரம் வேண்டும்
தயங்காமல் கேள்என்று தந்தை பணிக்க
சற்றும் சிந்திக் காமல் கேட்டார்
ஆருயிர் தந்தையே அன்னையின் அன்பும்
உடன்பிறந்தார் தெம்பும் ஒருவர்க்கு வேண்டும்
உடனே இவர்களை உயிர்ப்பித்துத் தாருங்கள்
இன்று நிகழ்ந்தவை யாவையும் அவர்கள்
சிந்தையில் இல்லாது செய்திட வேண்டும்
என்றே தந்தையைப் பணிந்து நின்றார்.
சொன்னதைச் செய்தமகன் கட்டளை ஏற்று
மன்னித்து அவர்களை உயிர்ப்பித்தார் முனிவர்.
முன்னொரு காலத்து கார்த்த வீரியன்
என்றவோர் அரசன் வேட்டை யாடிய
களைப்பில் அரசவை நோக்கித் திரும்பிக்
கொண்டி ருந்தான் வழியில் சமதக்கினி
முனிவர் ஆசிரமம் கண்டங்கு சென்றான்
முனிவரும் அவர்களை வரவேற்று களைப்புதீர
அறுசுவை உணவும் பானமும் அளித்திளைப்
பாற வசதிகள் செய்து கொடுத்தார்.
ஆசர மத்தில் இத்தகைய செல்வமும்
வசதியும் எப்படி கிடைத்தது என்று
முனிவர் கண்டு வினவ அதற்கு
தேவ லோக பசுவொன் றுள்ளது
தேவையைக் கேட்டால் தருமெனக் கூறினார்.
வியந்த அரசன் பசுவைத் தரும்படி
நயந்து கேட்க முனிவரும் மறுத்தார்.
அந்தப் பசுவை அடைந்திட வேண்டும்
என்றே அரசன் மனதுள் எண்ணி
யாரும் இல்லா நேரம் பார்த்து
சேவகர் மூலம் கவர்ந்து சென்றான்.
காம தேனு கவர்ந்ததை அறிந்த
மாமுனி வருந்தி பரசு ராமரிடம்
நடந்ததை வினவினார் கோபம் கொண்டு
நாடாளும் மன்னனின் தலையைக் கொய்து
காம தேனுவை மீட்டு தந்தார்.
தமயன் செய்ததை அறிந்த முனிவர்
ஒருவர் செயலை மன்னித்தல் தருமம்
அரசனைக் கொன்றது பாவத்தின் செயலே
உனது பாவம் முற்றும் நீங்கிட
புனிதத் தலங்கட்கு யாத்திரை சென்றார்
தந்தையின் சொல்லைத் தலைமேற் கொண்டு
மந்திரம் சொல்லி யாத்திரை சென்றார்.
கார்த்த வீரியன் புதல்வர்கள் தனது
தந்தையைக் கொன்ற பரசு ராமரையும்
முனிவரையும் பழிவாங்க எண்ணி ஆசிரமம்
வந்தங்கு தவத்தில் இருந்த முனிவர்
தலையை வெட்டி கவர்ந்து சென்றனர்
தாயின் மூலம் செய்தி அறிந்த
நேயப் புதல்வர் பரசு ராமர்
மூவேழ் தலைமுறை மன்னர் குலத்தை
வேறோடு அழிப்பேன் எனசூளு ரைத்து
கார்த்த வீரியன் புதல்வர் களையும்
அவர்கள் வழித்தோன்றல் அத்துணை பேரையும்
கொன்று சபதம் முடித்தப் பின்பாவம்
தீர தவம்செய்ய அடைந்தார் காடே.

ஏழாம் அவதாரம்

காட்டிலும் மேட்டிலும் வாழ்ந்த நிலையுரைக்க
வீடு குடும்பம் உறவு - கடமை
தலைவனைத் தேர்ந்தெடுத்தல் என்று பலநிலை
சொல்ல எடுத்தது ஏழு


ஏழாம் அவதாரம் சொல்லும் செய்தி
வழிவழி யாக மணிமுடி தரித்து
அயோத்தி ஆண்ட அரசன் தசரதன்
கோசலை கைகேயி சுமத்திரை என்று
ஆசை மனைவி மூவரை மணந்து
ஆண்டுபல சென்றும் குழந்தை பாக்கியம்
இன்றி தவித்து யாகத்தின் பயனாக
கோசலை வயிற்றில் குழந்தை யாக
பாச மகனாய் இராமனும் கைகேயி
வயிற்றில் பரதனும் சுமத்திரை வயிற்றில்
இலக்குவன் சத்துருகன் என்ற இருவரும்
பிறந்தனர் மகிழ்ச்சியில் திளைத்தது அயோத்தி.
தசரத மன்னன் மக்கள் நால்வரை
வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான்
கற்றல் கேட்டல் போர்ப்பயிற்சி என்று
சிறந்த முறையில் கற்றுத் தேர்ந்தனர்.
ஒருநாள் விசுவா மித்திரர் எனும்முனிவர்
ஒருவர் தசரத மன்னனை அணுகி
வேள்வியைக் காக்க இராமனை தன்னுடன்
அனுப்பி வைக்கு மாறு வேண்டினார்.
முனிவர் கேட்க இராமன் இலக்குவன்
இருவரையும் அனுப்பி வைத்தார் அங்கு
இருவரும் சேர்ந்து தாடகை முதலா
அரக்கரைக் கொன்று வேள்வியைக் காத்தனர்.
வேள்வியைச் சிறப்பாய் முடித்த பின்னர்
நல்வள முடைய மிதிலை நகருக்கு
மூவரும் சென்றனர். அதன்மன்னன் சனகன்
தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவர்க்கு
எம்முடைய மகளை மணமுடிப்பேன் என்றான்
மன்னர் பலரும் முயன்று தோற்றனர்
திண்ணிய தோள்கொண்ட தசதர ராமன்
முன்னிய நேரத்தில் வில்லினை முறித்தார்.
சனகனும் மகிழ்ந்து சீதையை இராமருக்கு
கண்ணீர் ததும்ப ஆனந்த பெருக்குடன்
மணமுடித்து மறுவீடு அனுப்பி வைத்தான்
அயோத்தி சென்ற ராமருக்கு முடிசூட்ட
தயாராகி தசரதன் நாள்குறித்து காத்திருந்தான்
கைகேயி தோழி கூனி என்பவள்
பரதனுக்கு முடிசூட்ட எண்ணி தோழியிடம்
தெரிவித்தாள் கைகேயி மறுத்தாள் பாம்பு
தீண்டிய மேனியாய் கூனியின்ஆசை
வார்த்தைகள் மனதை மெல்ல மெல்ல
மாற்ற கைகேயி உள்ளம் மாறியது.
முடிசூடும் மகிழ்ச்சியில் இருந்த தசரதன்
முடியாக் கோலத்தில் கைகேயியைக் கண்டான்
உண்மை யாதென வினவிய போது
முன்னொரு நாளில் இரண்டு வரங்கள்
தருவ தாக வாக்கு அளித்தீர்
தாருங்கள் இப்போது அதனை என்றாள்
மகிழ்ச்சியில் இருந்த தசரதன் தருகிறேன்
தக்கது கேள்என்று வினவி நின்றான்
ஆண்டு ஈரேழ் பரதன் நாடாள
இராமன் காடாள வேண்டும் என்றாள்
புரியாத நிலையில் அரசனும் குழம்பி
என்னக் கேட்கிறாய் முடியாது என்றான்
சொன்னசொல் தவறுவது அரசர்க் கழகோ
வேண்டிய வரமெனக்கு வேண்டும் என்றாள்
முன்னது நடக்கட்டும் பின்னது வேண்டாம்
என்று பலவாறு கெஞ்சினான் கேட்கவில்லை
இறுதியில் கைகேயி பிடிவாதம் வென்றதால்
இராமருடன் சீதை இலக்குவன் இருவரும்
காட்டிற்குச் சென்றனர் என்ற செய்தி
கேட்ட தசரதன் மன்னன் துன்பம்
தாளமாட் டாமல்தன் இன்னுயிர் துறந்தான்.
கேகய நாட்டிற்குச் சென்று திரும்பிய
கைகேயி மகனாம் பரதன் அறிந்து
வருந்தி தாயை வெறுத்து தந்தைக்கு
இறுதிச் சடங்கு செய்துபின் தனது
அண்ணனை அழைத்துவர காட்டிற்குச் சென்றான்
வனத்திற்கு வந்த பரதனை கண்டதும்
இராமன் மகிழ்ந்து தந்தை சொல்லை
நிறைவேற்ற வேண்டும் ஆகையால் நீசென்று
நல்லாட்சி செய்து மக்களைக் காத்திடென்
றின்முகத் தோடு வழியனுப்பி வைத்தார்.
பரதனும் இராமரின் பாதுகை பெற்று
அரச பிரதி நிதியாக ஆண்டுவந்தான்.
கங்கைக் கரையை இராமன் அடைந்ததும்
நெஞ்சம் பதைத்துகுகன் எதிர்சென்று அழைத்து
வேண்டிய பணிவிடை செய்து மகிழ்ந்துபின்
கங்கை ஆற்றைக் கடக்க உதவினான்.
வனத்தில் குடிலமைத்து தங்கிய காலத்து
இராவணன் தங்கை சூர்ப்பனகை வந்து
இராம இலக்குவனர் கண்டு தன்னை
திருமணம் செய்து கொள்ள வேண்டினாள்
மறுத்தும் கேட்காது போகவே மிக்க
கோபம் கொண்ட இளையோன் இலக்குவன்
அரக்கி மூக்கை அறுத்து எறிந்தான்
சூர்ப்பனகை அழுது கொண்டே அண்ணன்
இராவணன் இடத்து இராமன் இலக்குவன்
இருவ ரோடு அழகில் சிறந்த
அற்புத நங்கை வனத்தில் இருந்தாள்
உனக்காய் அவளைக் கவர்ந்துவர முயன்றேன்
என்னைத் தடுத்து இலக்குவன் என்போன்
மூக்கை அறுத்து விட்டான் என்றதும்
வெகுண்டு எழுந்த இராவணன் மாரீசன்
என்பவனை மயக்கும் அழகிய மாய
மானாக அனுப்பி இராம இலக்குவரை
தனியாகப் பிரித்து தனித்திருந்த சீதையை
பர்ண சாலை யோடு பெயர்த்து
பறக்கும் விமானத்தில் தூக்கிச் சென்றான்
கழுகு அரசன் சடாயு தடுக்கஅவன்
அழகிய சிறகினை வெட்டி வீழ்த்தினான்
பின்னர் இலங்கையில் உள்ளஅசோக
வனத்தில் சீதையை மறைத்து வைத்தான்
வந்தது மானில்லை என்றறிந்த இருவரும்
புள்ளி மானல்ல பொய்மான் என்றறிந்து
இல்லம் நோக்கி இருவரும் விரைந்து
அங்கு சீதையைக் காணாது வருந்தி
வனமெங்கும் தேடினர் ஓரி டத்தில்
உயிருக்கு போராடிக் கொண்டி ருந்த
சடாயு உண்மையை விளம்ப தொடர்ந்து
தேடி வரும்பொழுது குரங்குகளின் அரசன்
வாலியின் தம்பி சுக்கி ரீவனைச்
சந்தித்தனர் அவனுக்கு உதவ வாலியைக்
கொன்று பட்டம் சூட்டினார் சுக்ரீவன்
அனுமன் துணையோடு சீதை இருக்கும்
இடமறிந்து சமுத்தி ரத்தில் பாலம்
அமைத்து பெரும்படை யோடு இலங்கை
சென்று இராவணன் உள்ளிட்ட பகைவரை
வென்று சீதையை மீட்டு அயோத்தி
நகருக்கு மூவரும் திரும்பி வந்தனர்
பரதன் இராமரிடம் ஆட்சிப் பொறுப்பை
ஒப்ப டைக்க இராமர் ஆட்சிப்
பொறுப்பு ஏற்று தம்பியர் துணையுடன்
சிறந்த முறையில் ஆண்டார் நாடே.
எட்டாம் அவதாரம்
நாடு சமைதிட காடு திருத்தி
குடும்பம் அமைத்து பசிபோக்க - கிட்டும்
உணவுவகை தேடி உழுது பயிர்செய்தும்
வந்த நிலையுரைக்கும் எட்டு
எட்டாம் அவதாரம் சொல்லும் செய்தி
வசுதேவர் முதல்மனைவி ரோகிணி பெற்றெடுத்த
சிசுவான பலராமர் கிருஷ்ணனின் மூத்தவர்
கலப்பையை ஆயுத மாகத் தாங்கியவர்
பலசாலி வெண்ணிற தோற்றம் கொண்டவர்
கதைபோர் செய்யும் திறனைப் பெற்றோர்
அத்தை மகன்களாம் துரியோ தனன்வீமன்
இருவருக்கும் கதைப்பயிற்சி தந்த ஆசான்,
கிருட்டிண ரோடு இணைசேர்ந்து அரக்கர்
பலரை மாய்த்திட்டார் உறவாய் கௌரவர்
பக்கம் துணையாய் நின்று
ஆநிரை காத்து செய்தார் உழவே

ஒன்பதாம் அவதாரம்

உழவுசெய்தும் கால்நடை ஓம்பியும் வாழ்ந்தவன்
வாழும் முறைவகுத்த தன்படி - வாழ்ந்ததும்
தான்சார்ந்த மக்களைப் பாதுகாத்து வந்ததும்
சொல்ல எடுத்தது ஒன்பது


ஒன்பதாம் அவதாரம் சொல்லும் செய்தி
மண்பதை உலகில் யாவரும் அறிந்ததே
கம்சனின் பெரிய தந்தை மகள்தேவகி
தம்முடன் பிறந்த சகோதரி போலவே
பாசமும் அன்பும் கொண்டிருந்தான் தேவகிக்கு
திருமணக் காலம் வந்ததும் மதுரா
புரியை ஆண்ட மன்னன் சூரசேனன்
மைந்தனாம் வசுதே வருக்கு தங்கையை
மணமுடித்து சீர்வரிசை பலவும் தந்து
தன்தேரில் மறுவீடு அழைத்து சென்றான்
அப்போது வானில் இருந்து அசரீரி
சப்தமாய் முட்டாள் கம்சனே உன்னன்பு
சகோதரி வயிற்றில் பிறக்கும் எட்டாம்
மகவால் உனக்கு மரணம் நேர்ந்திடும்
என்று கூறியது இதுகேட்ட கம்சன்
தங்கை இருந்தால் தானே குழந்தை
பிறக்கும் கொன்று விட்டால் எப்படி
குழந்தை பிறக்கும் என்று தனது
வாளை உருவி அன்புத் தங்கையைக்
கொல்லப் போனான் விரைந்து தடுத்த
வசுதேவர் கன்னியைக் கொல்வது பாவம்
சிசுவால் தானே மரணம் நேரும்
தங்கையால் இல்லை அல்லவா எனவே
எங்களுக்குப் பிறக்கும் குழந்தை அனைத்தையும்
உன்னிடம் கொடுத்து விடுகிறோம் என்னசெய்ய
வேண்டும் என்று எண்ணு கிறாயோ
அதையேநீ செய்துகொள் என்றுதன் மனைவிக்கு
வந்த பேரா பத்தை தடுத்தார்
அந்த வார்த்தையில் நியாயம் கண்ட
கொலைவெறிக் கம்சன் சமாதான மாகி
நல்ல நிலையில் இருவரையும் வசுதேவர்
இல்லம் கொண்டு வந்து சேர்த்தான்
நாட்கள் நகர்ந்தனதேவகி கருவுற்றாள்
அடிக்கடி கம்சனும் கவனித்து வந்தான்
குறிப்பிட்ட நாளில் குழந்தை பிறந்தது
கீர்த்திமான் என்று பெயரும் சூட்டினர்
இந்தக் குழந்தையை கம்சன் இடத்தில்
தந்திட தேவகி மறுத்திட வசுதேவர்
ஆறுதல் கூறி எடுத்துச் சென்றார்
நெஞ்சு கனக்க கண்களில் நீர்மல்க
பிஞ்சு பாலகனைக் கம்சனிடம் கொடுத்து
முன்னர் நானுனக்கு சொன்ன சொல்படி
உன்னிடம் தந்தேன் பெற்றுக்கொள் என்றார்
மைத்துனர் செயலில் மகிழ்ந்த கம்சன்
முத்தாய் குழந்தையை கையில் வாங்கி
புன்னகை ததும்ப திருப்பிக் கொடுத்து
உன்னுடை எட்டாம் மகனே எனக்கெதிர்
இந்தக் குழந்தையால் பயமில்லை எனக்கு
எனவே இவனை எடுத்துச்செல் லுங்களென்று
மைத்துன ரிடத்தில் மகவைக் கொடுத்தான்
இதனைக் கேட்ட வசுதேவர் மகிழ்ந்து
பதமாய் மகவைக் கையில் வாங்கி
மார்போடு தழுவி உச்சி முகர்ந்து
பரிவாய் கம்சனிடம் விடைபெற்றுக் கொண்டு
தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்தார்
கணவர் கையில் இருந்த குழந்தை
உயிருடன் இருப்பது கண்டு தேவகி
மகிழ்ந்து அள்ளி எடுத்து கொஞ்சினாள்
திகைப்பில் ஆழ்ந்து நடந்ததைக் கேட்டறிந்தாள்
இப்படி யாக வருடங்கள் பலகடந்து
அடுத்து அடுத்து ஐந்துஆண் குழந்தைகளைப்
பெற்றெடுத்து வளர்த்து வந்தாள் தேவகி.
மகிழ்ச்சி யாக இருந்த தருணம் நாரதர்
ஒருமுறை கம்சன் அவைக்கு வந்தார்
சிறப்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தான்
நாரதர் கம்சனை நோக்கி கம்சா
உன்னைக் கொல்ல எண்ணி பகவான்
உனது தங்கை தேவகி வயிற்றில்
பிறக்கப் போகிறார் அவர்மூலம் உங்கள்
அரக்கர் கூட்டம் அழியப் போகிறது
என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.
சொன்ன வார்த்தை கேட்ட கம்சனுக்கு
தன்னுள் மறைந்திருந்த அரக்க குணங்கள்
வெளிப்பட் டெழுந்தது தன்னைக் காத்துக்
கொள்ள எண்ணி தந்தையைத் துன்புறுத்தி
நாட்டைப் பறித்தான் பிரலம்பன் முதலான
அரக்கர் கூட்டத்தை தன்னுடன் சேர்த்தான்
பரிவில் லாமல் கொல்லாது விடுத்த
ஆறு குழந்தைகளைக் கொன்று குவித்தான்
அறிந்து அழுது புலம்பிய தங்கை
மைத்துனர் இருவருக்கும் விலங்கிட்டு கொடுஞ்சிறை
வைத்து சுற்றியும் காவலர் நிறுத்தினான்
பெருங்கொடுமை அனுபவித்த நிலையில் தேவகி
கருவுற்று முன்னர் பிறந்த குழந்தைகள்
நிலையெண்ணி இந்தக் குழந்தைக்கு என்ன
நிலையோ எனநினைத்து வருந்தி துடித்தாள்
இப்படி இருக்க வைகுண்டத்தில் இருக்கும்
பகவான் மாயையை அழைத்து தேவி
கம்சனுக்குத் தெரியாமல் வசுதேவர் தன்முதல்
மனைவி ரோகிணையை நந்தகோபன் இல்லத்தில்
இரகசிய மாகத் தங்க வைத்துள்ளார்
ஆதி சேடனின் அம்சமான குழந்தை தேவகி
வறிற்றில் வளர்ந்து வருகிறது அதனை
ரோகிணி வற்றிற்கு மாற்றிவிடு அத்துடன்
நந்தகோபன் மனைவி யசோதை வயிற்றில்
நீபெண்ணாய் பிறந்திடு என்று கூறினார்.
அதன்படி மாயைக் கருவை மாற்றினாள்
அத்துடன் தானும் யசோதை வயிற்றில்
கருவாகி வளர்ந்து வந்தாள் இந்நிலையில்
கருமா றியதால் தேவகியின் வயிற்றில்
கருஇல் லாமல் போனது இதனால்
கொலைவெறி கம்சன் மேலுள்ள பயத்தில்
கலைந்து விட்டது கருஎன்று எண்ணினர்
சிலநாட்கள் செல்ல தேவகி மீண்டும்
கருவுற்றாள் இக்கருவில் பகவான் வளர்ந்துவந்தார்
கருவுற்றாள் தேவகி என்ற செய்திகேட்டு
காவலர்கள் அழைத்து எச்சரிக்கை செய்து
காவலைக் கடுமையாக்க கட்டளை இட்டான்
பிரசவ காலமும் நெருங்கிவர தேவகி
அரியை அனுதினமும் சிந்தையில் நினைந்து
பிரார்தனை செய்து வணங்கி வந்தாள்
அன்று ஆவணி மாதம் அட்டமிநாள்
இனிய இரவு நேரத்தில் பகவான்
திருஅவ தாரம் செய்தார் குழந்தையின்
தோற்றம் கண்ட வசுதேவர் மகிழ்ந்து
தன்னிரு கரங்களையும் கூப்பி வணங்கினார்
எனினும் குழந்தை பிறந்தது தெரிந்தால்
கம்சன் பணியாட்கள் மூலம் செய்தி
அறிந்து கொன்று விடுவான் எனவே
சிசுவை எப்படிக் காப்பதென செய்வது
அறியாது தேவகியும் வசுதேவரும் விழித்தனர்
இந்த நிலையில் பிறந்த குழந்தை
கம்சனைக் கண்டு நீங்கள் பயம்கொள்வதால்
என்னை நீங்கள் இங்கு வைத்திருக்க
வேண்டாம் கோகுலத்தில் யசோதைக்கு
மாயை யானவள் பிறந்தி ருக்கிறாள்
என்னை அங்கு கொண்டுசென்று விட்டுவிட்டு
பெண்ணாய் பிறந்த அந்தக் குழந்தையை
இங்கே கொண்டு வாருங்கள் நீங்கள்
செல்லும் பொருட்டு உங்களை பிணித்த
விலங்குகள் தானே கழலும் கதவுகளும்
திறக்கப்படும் கடத்தற் கரிய யமுனையும்
சிரம மின்றி செல்ல வழிவிடும்
என்று ஆலோ சனைகளைக் கூறியது
இந்த வார்ந்தைகளைக் கேட்ட இருவரும்
வியப்பில் ஆழ்ந்து ஆனந்தம் அடைந்தனர்
குழந்தை சொன்னது போலவே அவரின்
விலங்குகள் கழண்டன கதவுகள் திறந்தன
காவல் இருந்தவர் உறங்கிக் கிடந்தனர்
இதனைப் பயன்படுத்தி வசுதேவர் குழந்தையைத்
தூக்கி கூடையில் வைத்து கோகுலம்
நோக்கி விரைவாய் நடந்தார் வழியில்
இருந்த ஆறும் வழிவிட்டு ஒதுங்கியது
ஆற்றைக் கடந்து கோகுலம் அடைந்தார்
கோகுல வாசிகளும் தூக்கத்தில் இருந்தனர்
அந்த நேரத்தில் நந்த கோபர்
அன்புடை மனைவிக்கு குழந்தை பிறந்தது
பிறந்தது ஆணா பெண்ணா என்று
உணர முடியாமல் மயக்கத்தில் இருந்தாள்
அனைத்தும் சாதக மாக அமைய
உள்ளே சென்ற வசுதேவர் பக்கத்தில்
உள்ளபெண் குழந்தையை கண்டு மகிழ்ந்து
தனது குழந்தையை யசோதை அருகில்
கிடத்தி பெண்கு ழந்தையை கையில்
எடுத்துசிறைச் சாலைக்குத் திரும்பி வந்தார்.
சிறைக்குள் வசுதேவர் நுழைந்த போது
அறைக்கதவு கள்தாமே மூடிக் கொண்டன
கைகால் விலங்குகளும் பூட்டிக் கொண்டன
அங்கு சூழ்ந்த மாயையும் விலகியது
அமைதி யாக இருந்த குழந்தை
வீறிட்டு அலறியது அழுகுரல் கேட்டு
உறங்கிய காவலர் விழிந்தெ ழுந்து
விரைந்து ஓடி தேவகி மடியில்
இருந்த குழந்தையைக் கண்டு அதனை
கம்ச னிடத்தில் சொல்ல ஓடினர்
இந்தச் செய்தி கேட்டதும் கம்சன்
ஆத்திரம் கொண்டு வாளைக் கையிலேந்தி
காற்றின் வேகத்தில் சிறைச்சாலை வந்தான்
கம்சனைக் கண்டதும் தேவகி குழந்தையை
தம்மார் போடு அணைத்துக் கொண்டாள்
என்னைக் கொல்லப் பிறந்த குழந்தையை
என்னிடம் கொடுவென்று சீறிப் பாய்ந்தான்
வேண்டாம் அண்ணா ஆறு குழந்தைகளைக்
கொண்டு விட்டீர் இதுவோ பெண்குழந்தை
கொல்ல வேண்டாம் விட்டுவிடு என்று
மெல்லிய குரலில் கூறி மறுத்தாள்
தேவகியின் வார்த்தைகளை காதில் வாங்கிக்
கொள்ளா நிலையில் குழந்தையைப் பிடுங்கி
கால்கள் இரண்டையும் கைகளில் பிடித்து
கல்லில் ஓங்கி சுழற்றி அடித்தான்
கல்லில் மோதாது அந்தக் குழந்தை
பெரிய உருவெடுத்து அந்த ரத்தில்
பேரொலி எழுப்பி திவ்விய மான
எட்டுக் கைகளுடன் காணப் பட்டது
கேடகம் வில்சூலம் கத்திசங்கம்சக்கரம்
கதைமுத லான ஆயு தங்களோடு
அதிரும் குரலுடன் அறிவிலி மூடனே
என்னைக் கொல்ல உன்னால் முடியாது
என்பா தங்களை உன்கைகளால் தெரிந்தோ?
தெரியா மலோ? தொட்டு விட்டாயதன்
பொருட்டு உன்னை மன்னித்து விடுகிறேன்
உன்னைக் கொல்ல பிறந்து இருப்பவர்
வேறோர் இடத்தில் வளர்ந்து வருகிறார்
என்று கூறி அக்குழந்தை மறைந்தது
இதனைக் கேட்ட கம்சன் திடுக்கிட்டு
செய்வ தறியாது திகைத்து நின்றான்
தயங்கிய நிலையில் தங்கை மைத்துனர்
இருவரின் விலங்கு களையும் அகற்றினான்
வருத்த முற்று என்னை மன்னியுங்கள்
உங்களைத் தண்டித்த பெரும்பாவி யானேன்
என்று வருந்தி கண்ணீர் விட்டான்.
தழுதழுத்த குரலில் சகோதரி நான்பெரும் பாவி
ஈவு இரக்கம் இன்றி உங்கள்
குழந்தைகளைக் கொன்று விட்டேன் வருந்தம்
கொள்ளவேண்டாம் உங்களை விடுதலை செய்கிறேன்
உங்கள் விருப்பம் போல வாழுங்கள்
அரண்ம னைக்குச் செல்லுங்கள் என்று
தேரில் ஏற்றி அனுப்பி வைத்தான்
பெரிய துன்பம் விலகியது என்று
மகிழ்வு கொண்டு இல்லம் சேர்ந்தனர்
வசுதேவர் தேவகி சென்ற பின்னர்
கம்சன்தன் ஆலோ சகர்களை அழைத்தான்
அங்கு கூடிய அவர்கள் பத்து
தினங்க ளுக்குள் பிறந்த குழந்தைகள்
யாவரையும் கொன்று விடுக என்றனர்.
அவர்கள் கூறிய கருத்தை ஏற்றான்.
குழந்தை இடம்மாறிய சந்று நேரத்தில்
விழிப்பு கொண்டவராய் யாவரும் விழித்தனர்
கண்விழித்துப் பார்த்த யசோதையும் மெல்ல
தனது பக்கத்தில் இருந்த ஆண்மகவைக்
கண்டு மகிழ்ந்துவாரி எடுத்து மகிழ்ந்தாள்
நந்த கோபர் இச்செய்தி கேட்டு
விரைந்து வந்து கண்டு மகிழ்ந்தார்
அறிந்த கோகுல மக்களும் பரிசு
பொருட்களோடு வந்து கண்டு களித்தனர்
கிருட்டிணன் என்று பெயரிட்டு அழைத்தனர்
ஒருபக்கம் இதுஇருக்க தேவகி வயிற்றில்
உருவான ஏழா வதுகரு பகவான்
திட்டப்படி ரோகிணி வயிற்றிற்கு மாற்றப்
பட்டு குறித்த காலத்தில் வெண்மை
நிறத்தில் அழகிய ஆண்குழந்தை ஒன்று
பிறந்தது அந்தக் குழந்தைக்கு ரோகிணி
இராமன் என்று பெயரிட்டு இருந்தாள்
யசோதைக்குக் குழந்தை பிறந்தது என்றதும்
ரோகிணி தன்மகன் இராமனை அழைத்துக்
கொண்டு குழந்தையைக் காண வந்துசேர்ந்தாள்
நந்தகோபர் வழக்கம்போல் கம்சனுக்குச் செலுத்த
வேண்டிய வரியும் பரிசு பொருளும்
கொண்டு வந்து கொடுத்து விட்டு
திரும்பும் வழியில் நண்பர் வசுதேவரைக்
கண்டு உளம்மகிழ்ந்து நலம்விசா ரித்து
திரும்பிக் கொண்டி ருந்த போது
கம்சன் அவனுடைய அமைச்சர் பலருடன்
ஆலோசனை செய்து புதியதாய் பிறந்த
குழந்தைகளை எல்லாம் கொன்று விடும்படி
உத்தரவு பிறப்பித்தான் என்ற செய்தியை
மக்கள் வழியாக அறிந்து அதிர்ந்து
கோகுலம் நோக்கி விரைந்து சென்றார்
கம்சனின் ஆணையை ஏற்று பூதனை
என்னும் அரக்கி கிராமங்கள் தோறும்
சென்று புதியதாய் பிறந்த குழந்தைகள்
தேடி கொன்று குவித்து வந்தாள்
விரும்பிய வடிவெடுக்கும் சக்தி படைத்த
அரக்கி பூதகி கோகுலம் சென்று
யசோதா உருவேற்று கிருட்டிண னிடம்சென்று
நஞ்சு தடவிய முலைக்காம்பை அவன்வாயில்
திணித்து சுவைக்கச் செய்தாள் பாலை
உண்ட குழந்தை சற்று நேரத்தில்
இறந்து விடுமென்று எண்ணினாள் பூதகி
உறிஞ்சிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில்
பாலோடு சேர்த்து உயிரையும் சேர்த்துறிஞ்ச
வலிதாங்க மாட்டாமல் பேரொளி எழுப்ப
தன்னை விட்டு விடும்படி அலறி
நெடுமரம் போல கீழே விழுந்தாள்
கொஞ்சம் கொஞ்சமாக உயிர்அவளை விட்டு
பிரியத் தொடங்கியது அவளது உருவமும்
அரக்க உருவத்தை அடைந்தது இதனைக்
கண்ட யசோதை பயந்து நடுங்கி
தனது குழந்தையின் அருகே சென்று
தூக்கி தன்மார்பில் அணைத்துக் கொண்டாள்
செய்தி அறிந்த நந்த கோபர்
தெய்வச் செயலால் தன்மகன் பிழைத்தான்
என்று தெளிந்து கடவுளை வணங்கினார்.
தன்னால் அனுப்பப் பட்ட பூதகி
இறந்த செய்தி யறிந்த கம்சன்
புரியாது விழித்து ஆத்திரம் கொண்டு
சக்கர வடிவம் கொண்டு அழிக்கும்
சகடா சூரனை அழைத்து குழந்தையைக்
கொன்றுவர கட்டளை யிட்டு அனுப்பினான்.
மக்கள் உலவும் சாலையின் மத்தியில்
சக்கரம் ஒன்றுதானே உருண்டு வரக்கண்டு
திகைப்படைந்த மக்கள் தலைதெறிக்க ஓடினர்
சகடா சூரன் குழந்தை பக்கமாக
உருண்டு வேகமாக ஓட அங்கே
இருந்த மக்கள் குழந்தை குழந்தை
என்று அலறினர் அங்கு மிங்கும்
சிதறி ஓடினர் இச்சத்தம் கேட்ட
குழந்தை கண்விழித்து கைகால்களை அசைக்க
தொட்டிலை நெருங்கிய சக்கரத்தில் கால்பட
பட்டென் றுடைந்து அசுரன் உயிர்விட்டான்
இந்தச் செய்தியும் கம்சனுக்குச் செல்ல
சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொண்டான்
தன்னைக் கொல்லப் பிறந்தவன் கோகுலத்தில்
வளரும் கிருட்டிணனே என்று ஆதலால்
அவனைக் கொன்று விடவேண்டும் என்றெண்ணி
சகடா சூரனின் நண்பன் திருணா
வர்த்தன் என்பவனை ஏவினான் அவனோ
காற்றாய் சுழன்றழிக்கும் தன்மை கொண்டவன்
அரக்கர் தலைவன் கம்சனின் ஆணையேற்று
பெரிய சுழலாய் மாறி கோகுலம்
நோக்கி விரைந்து குழந்தை இருக்கும்
பக்கம் சென்று தூக்கி வேகமாக
சுழன்று கொல்ல முயற்சி செய்தான்
குழந்தையோ திருணா வர்த்தனின் கழுத்தை
இறுக்கிப் பற்றிக் கொள்ள மூச்சு
விடமு டியாமல் அரக்கன் இறந்தான்
இவ்வாறு கம்சன் அனுப்பிய அனைத்து
அரக்கர் களையும் கிருட்டிணன் வதம்செய்தான்
கிருட்டிணனைக் கொல்லும் பொருட்டு கம்சன்
எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றன.
இறுதியில் கம்சனும் கிருட்டிணனும் நேருக்கு
நேராய் மோதியும் கீழே தள்ளியும்
தரையில் உருண்டும் பலவிதமாய்ச் சண்டையிட்டு
கொடியவனை அழித்தார் பேராற்றல் கொண்டே.

பத்தாம் அவதாரம்

பேராசை வன்மம் கொலைகாமம் சூழ்ச்சி
பொறாமை சுயநலம் நீதி - நெறிதவறல்
என்பன மிக்கெழும் காலத் ததைமாய்க்க
எடுக்க இருப்பது பத்து

பத்தாம் அவதாரம் சொல்லும் செய்தி
சத்தியம் தருமம் பொறுமைதயை தாட்சண்யம்
தேகபலன் ஆயுள் ஞாபகம் போன்றவை
நாளுக்கு நாள்குறையும் பணமே மற்ற
எல்லா வற்றையும் விடமுதன்மை யாகும்
பெற்றோர் விருப்பத் திற்கு மாறாக
திருமணம் செய்து கொள்வர் கொடுக்கல்
வாங்கலில் ஏமாற் றுதலே மிஞ்சும்
அந்தணன் தன்னுடை தர்மத்தை மீறுவான்
ஒழுக்கநெறியின்றி விருப்ப வழிசெல்வர்
குழந்தை மனைவி உறவுகளை மறப்பர்
பெற்றோரைக் காப்பது முற்றிலும் மாறும்
கௌரவத்திற் காக எதையும் இழப்பர்
பணம்படைத் தவனின் சொல்வழி நடப்பர்
மனமும் உடலும் நோய்வாய்ப் படுமே
உரிய நேரத்தில் மழைபொழி யாது
வறுமைத் துன்பம் தலைவிரித் தாடும்
சொத்துக் காக உறவினைத் துறப்பர்
அதர்மம் மட்டுமே பூமியில் வாழும்
ஒருவர் மீது ஒருவர் பழிசொல்வார்
தரும தானங்கள் இல்லாமல் போகும்
கணவரின் உறவினர் துரத்தப் படுவார்
மனைவியின் உறவினர் மதிக்கப் படுவார்
பணபலம் உள்ளவர் சொல்லே மந்திரம்
பெண்கள் தன்வழி செல்லவே எண்ணுவர்
மொத்தத்தில் பழையன எல்லாம் மாறும்
அதர்மம் மோசடி எல்லையை மீற
கலியுக முடிவில் மீண்டும் திருமால்
வெள்ளைப் பரியின் மீதே வாளோடு
தோன்றி அழிப்பார் துன்பங்கள் யாவுமே.

No comments:

Post a Comment