‘மங்கையராய்ப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’
என்று கூறுவார் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை. அத்தகைய பெண்களின் இயல்புகளைத் தொல்காப்பியர்,
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப,
என்று கூறுவார். அச்சம், நாணம், மடம், பயிற்பு ஆகிய குணங்களைப் பெற்று மென்மைத் தன்மையோடு இயங்கும் இப்பெண்களை பல செயல்பாடுகளில் விலக்கி வைப்பதும் முன்னிலைப் படுத்தாததும் இந்தச் சமுதாயம் பெண்களுக்குச் செய்த மிகப்பெரிய அநீதி என்றே கூறலாம். ஆயினும் முன்னேற்றம் அடைந்த பெண்களின் வரலாறுகளை ஆராய்ந்து பார்க்கின்ற போது, சுயம்புவாகப் பல தடைக் கற்களைத் தாண்டி சாதனைச் சிகரங்களை அடைந்துள்ளதையும் நம்மால் காணமுடிகிறது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற வாய்ச்சொல் வீரர்களின் கூற்றையெல்லாம் பொய்ப்பித்து,
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
என்ற பாரதியின் பாட்டை மெய்ப்பிக்கும் நிலையும் இன்று நிலவி வருகிறது. மடமை என்ற சொல்லுக்குத் தவறான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு பெண்கள் அறிவில் பின்தங்கியவர்கள் என்ற வீனர்களின் கூற்றை உடைத்த பாரதி,
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடும் காணீர்
என்ற தனது முரசுப் பாட்டில், பெண்களின் அறிவு நிலையை மிக விசாலமானது என்று கூறுவார். பெண்களை இழிவு படுத்துபவர்களையும் அவமானப் படுத்துபவர்களையும் எச்சரிக்கும் விதமாக இரட்டணை நாராயணகவி தனது திரௌபதி அம்மன் பிள்ளைத் தமிழில்,
அன்னை தங்கை தோழியுடன்
இல்லத் துணையும் பெண்ணினமே
தனது மகளாய் வருபவளும்
துன்பம் தாளா ஓரினமே
அன்பு வடிவாம் பெண்ணினத்தை
மதித்துக் காப்பது நம்கடமை
அன்பில் லாமல் நடத்திடுவோர்
துன்ப முற்று வருந்திடுவார்
அன்னைப் போன்ற பெண்குலத்தை
போற்றா தவரை அவமதித்தால்
கௌரவர் கூட்டம் போலாகி
கூண்டோ டழிந்து போய்விடுவர்
உன்போல் பெண்ணைக் காத்திடவே
மகிழ்ந்து ஊஞ்சல் ஆடுகவே
பெண்கள் வெற்றி பெற்றிடவே
சிறப்பாய் ஊஞ்சல் ஆடுகவே (பா. 99)
என்று பாடுகிறார். இன்று பெண்கள், இலக்கியம், இசை, நாட்டியம், மருத்துவம், பொறியியல், நடிப்பு, விளையாட்டு, வானியல் எனப் பல்துறைகளில் சாதித்து வருகின்றனர். இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் இச்சாதனை நிகழ்வுகள் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து, பெண்களும் பெண்மையும் மிளிரவேண்டுமென வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment