சிலப்பதிகாரத்தில் தேவந்தியின் பாத்திரப் படைப்பு
எந்த ஒரு படைப்பும் முதன்மை மாந்தர்களை மட்டுமே வைத்து படைக்கப் படுவதில்லை. கதைக்கும் கதைப்போக்கிற்கும் ஏற்ப பல துணை மாந்தர்களையும் காவியங்களில் இணைத்து படைக்கப்படுவதுண்டு. இவ்வகையில் சிலப்பதிகாரத்திலும் பல துணை மாந்தர்கள் அமைந்துள்ளனர். அவர்களுள் தேவந்தி என்பவளும் ஒருத்தி. இத்தேவந்தியின் பாத்திரப் படைப்பை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காப்பியத்தில் தேவந்தி
சிலப்பதிகார கனாத்திறம் உரைத்த காதையில் கண்ணகியின் தோழியாக தேவந்தி அறிமுகம் செய்யப்படுகிறாள். இத்தேவந்தியும் கண்ணகியும் எந்த சூழ்நிலையில் தோழியானார்கள் என்பதைக் காப்பியத்தில் ஆசிரியர் குறிப்பிடவில்லை. கோவலன், கண்ணகி இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் போதும் தேவந்தி பற்றிய குறிப்பு இல்லை. கோவலன் கண்ணகியைப் பிரிந்து சென்றப் பிறகு கண்ணகியின் தோழியாக காப்பியத்தில் புனையப்படுகிறது. தேவந்தியை அறிமுகபடுத்தும் போதுகூட ஆசிரியர், பாசண்டசாத்தன் மனைவி என்றே அறிமுகம் செய்கிறார். இதனை,
“தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
பூந்த உண்கண் பொறுக்கொன்று மேவித்தன் சிலம்பு. 9 : 33-34
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
தேவந்தியின் வரலாறு
தேவந்தியைக் கண்ணகியின் தோழியாகக் குறிப்பிடும் ஆசிரியர், அவள் தாய் தந்தையர் யார் என்றோ? அவள் ஊர் யாது என்றோ? காப்பியத்தின் ஒர் இடத்தில்கூட குறிப்பிடவில்லை. தேவந்தியும் பாசண்ட சாத்தனும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் எட்டாண்டுகள் இருந்தபோதும் உள்ளப் புணர்ச்சியன்றி உடலுறு புணர்ச்சி ஏதும் நடக்கவில்லை.
தேவந்தியோடு தொடர்ந்து இல்வாழ்க்கையை நடத்த இயலாத நிலையில் பாசண்டைசாத்தன், தான் தெய்வம் என்பதை தேவந்திக்கு உணர்த்தி “எம்முடைய கோயிலுக்கு நீ வா” என்று கூறிச் சென்று விடுவதாகவும் ஊரில் உள்ளவர்களுக்கு, தேசாந்திரம் சென்ற கணவன் திரும்பி வருவதற்காகத் தான் கோயில் சென்று வழிபடுவதாகக் கூறி சாத்தன் கோயிலில் தேவந்தி வழிபாடுகள் நிகழ்த்தி வருகிறாள் தேவந்தி.
தேவந்தியின் அறிவுரை
கணவனுக்காகக் கோயில்களில் வழிபாடுகள் செய்து வரும் தேவந்திக்கு, தன்னைப் போலவே கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகி நினைவுக்கு வர, அவளைக் காணவேண்டும் என்ற நோக்கோடு கண்ணகி இல்லம் செல்கிறாள்.
கண்ணகி நல்லாளுக் குற்ற குறையுண் டென்று
எண்ணிய நெஞ்சத் தினையளாய் நண்ணி சிலம்பு 9 : 41- 42
அங்கு, கண்ணகி தன் கணவனைப் பிரிந்து கவலை கொண்டுள்ளாள் என்பது அறிந்து, பூவும் நெல்லும் தூவி கடவுளை வழிபட்டால் கணவனை அடையலாம் என்று கூறுகிறாள்.
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோடு’ சிலம்பு 9 : 43- 44
அதுகேட்ட கண்ணகி, நீ இவ்வாறு கூறுவது ஆறுதல் அளித்தாலும் நான் கண்ட கனவு என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது என்று தான் கண்ட கனவைக் கூறுகிறாள். தேவந்தி, “உன் கணவன் உன்னை வெறுக்கவில்லை. முற்பிறவியில் நீ உன் கணவனுக்காகச் செய்ய வேண்டிய நோன்பினைச் செய்யாமல் விட்டுவிட்டாய். அந்நோன்பினை நீ செய்து முடித்தால் உன் கணவனோடு இன்புற்று வாழ்வாய் என்று கூறி, சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் நீர்த்தடங்களில் மூழ்கி தொழும்படிக் கூறுகிறாள்.
“கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்
மடலவிழ் நெய்தலால் கானல் தடமுள
சோமகுண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கி” சிலம்பு 9 : 57- 59
இக்கூற்றை கேட்ட கண்ணகி, “பீடு அன்று” என்று கூறி மறுத்துவிடுகிறாள். இவ்வாறே இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும்போதே கோவலன் வீடு வந்து சேர்கிறான்.
தேவந்தியின் நம்பிக்கை
வழிபாடுகள் செய்தால் கணவனை அடையலாம் என்ற தேவந்தியின் நம்பிக்கையே கோவலனை வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டது என்றால், வழிபாடு செய்திருந்தால் கோவலனும் கண்ணகியும் நீண்டநாள் இன்புற்று வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணும் அளவிற்கு தேவந்தியை ஒரு நம்பிக்கை ஊட்டியாகக் காப்பியத்தில் அமைத்துள்ளார் ஆசிரியர்.
தேவந்தி கூறும் வழிபாட்டு முறை
தமிழர்கள் வழிபாட்டு முறைகளில் ‘நெல்லும் மலரும்’ இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன. தேவந்தியும்,
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று சிலம்பு 9 : 43
என்ற பாடலடியில் அறுகம்புல், சிறுபூனைப்பூ, நெல் முதலானவற்றைத் தூவி வழிபடவேண்டும் என்று கூறுகிறாள். இவ்வாறு நெல்லும் மலரும் தூவி வழிபடும் முறையினை, நெடுநல்வாடையும் முல்லைப்பாட்டும் கூறுகின்றன.
நெல்லும் மலரும் குஉய் கைதொழுது நெடுநல்வாடை பா. 36
‘நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பு
அவிழ் அலரி தூஉய்க் கை தொழுது’ முல்லைப்பாட்டு 8 – 10
நெல்லும் மலரும் மட்டுமன்றி அரிசியும் மலரும், நீரும் மலரும், திணையும் மலரும், நெல்லும் பொறியும் தூவி வழிபாடுகள் செய்யும் முறைகளையும் இலக்கியங்கள் பகர்கின்றன.
“நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க” அகநானூறு பா. 86
அறிமுகமும் புலம்பலும்
கனாத்திறம் உரைத்த காதையினை அடுத்து வாழ்த்துக் காதையில் வெளிப்படும் தேவந்தி, கோவலன் கொலையுண்ட சேதி கேட்டு மதுரையை அடைகிறாள். அங்கு கண்ணகியைக் காணாத நிலையில் மலைநாட்டை அடைந்து சேர மன்னன் குட்டுவனிடம் தான் யார் என்பதை அறிமுகம் செய்துகொள்கிறாள்.
“முடி மன்னர் மூவருங் காத்தோம்பித் தெய்வ
வடபே ரிமய மலையிற் பிறந்து
கடுவரற்கங்கைப்புனலாடிப்போந்
தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர்
சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்” சிலம்பு. பா. 29 : 2
அதன் பின்னர் கண்ணகியின் கோட்டம் சென்று ஆற்ற மாட்டாதவளாய், முன்பே நீ கண்ட கனவை என்னிடத்தில் உரைக்க அதைநான் என் புத்தியில் உரைக்காமல் விட்டுவிட்டேனே, இன்று உன் அன்னையும் மாமியும் இறந்துவிட்ட செய்தியினைக் கூட அறியமாட்டாமல் சென்றுவிட்டாயே. உன்னை அடைக்களமாய்ப் பெற்று காத்து, உன் அவல நிலைக்கு ஆற்றாமல் உயிர்விட்ட மாதிரி மகள் ஐயை வந்திருக்கிறாள் அவளைக் காண நீ வரமாட்டாயோ தோழி, என்றெல்லாம் அரற்றுவதாகக் காப்பியம் புகலுகின்றது.
செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன்
மொய்குழன் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்
அவ்வை யுயிர்வீவுங் கேட்டாயோ தோழீ
அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ சிலம்பு பா. 9.5
ஐயந்தீர் காட்சி யடைக்கலங் காத்தோம்ப
வல்லாதேன் பெற்றேன் மயலென் றுயிர்நீத்த
அவ்வை மகளிவடான் அம்மணம் பட்டிலா
வையையிற் றையையைக் கண்டாயோ தோழீ
மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ சிலம்பு பா. 9.8
பலரது வரலாறு கூறப்படல்
கண்ணகிக்குக் குட்டுவன் எடுத்த கோவிலில் பூசனைகள் செய்பவளாக தேவந்தி அமைந்தாலும் அவள் வழியே, மதவி, மணிமேகலை, இளங்கோயவடிகள் ஆகியோரது துறவு வாழ்க்கை, கண்ணகி முதலான கதைமாந்தர்களின் வரலாறு ஆகியவை வெளிப்படுவதற்கு அவளின் பாத்திரப் படைப்பு காப்பியத்தில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது எனலாம்.
தொகுப்புரை
தெய்வ வடிவான பாசண்டை சாத்தன் மனைவியான தேவந்தி, கனாத்திறம் உரைத்தகாதை, வாழ்த்துக்காதை, வரந்தருக்காதை ஆகிய மூன்று காதையில் வருபவளாகப் படைக்கப்பட்டிருந்தாலும், கண்ணகியின் பெருமை வெளிப்படவும் அவள் கனவு கூறப்படவும் மிக முக்கிய கதாப்பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியது.
காப்பியத்தின் இறுதியில், கண்ணகிக்குக் குட்டுவன் எடுத்த கோயில் சென்று ஆற்றாது, கண்ணகியின் தாய், மாமி, மாதிரி ஆகியோரது இறப்பு, மாதவி, மணிமேகலை ஆகியோரின் துறவு முதலான செய்திகளைக் கூறி அரற்றும் பாங்கு, ஓர் உயிர்த் தோழியின் மனக்குமுரலைக் காட்டுகிறது.
காப்பிய இறுதியில் தெய்வம் ஏறப் பெற்றவளாக வரும் தேவந்தி, மாதவி, மணிமேகலை, இளங்கோவடிகள் ஆகியோரின் துறவு வரலாறு, கண்ணகி முதலான கதைமாந்தர்களின் வரலாறு கூறப்படுவதற்க காரணமாகவும் அமைகிறாள்.
துணை நூற் பட்டியல்
- சிலப்பதிகார மூலமும் ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையும், கழக வெளியீடு, 1959.
- சிலம்பும் சிந்தாமணியும், ச.வே. சுப்பிரமணியன், 1977
- செல்வச் சிலம்பு, க. சோமசுந்தரம் (தொகுப்பாசிரியர்) தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம், சென்னை – 05, 1976
- அவல நாடக நோக்கில் சிலம்பு, மணிவேலன், தேன்தமிழ்ப் பதிப்பகம், சேலம்- 1, 1979
No comments:
Post a Comment