தமிழ்மொழியில் இலக்கணத்தை ஐந்தாய் பகுத்து
தரமாக விரிவாகத் தந்தார் சான்றோர்
எம்மொழிக்கும் இல்லாத சிறப்பு ஒன்று
வாழ்க்கையின்நல் இலக்கணத்தை வகுத்துச் சொல்லல்
நம்மொழியில் இலக்கணத்தை முதலில் தந்த
காப்பியனார் மொழிந்திட்ட களவும் கற்பும்
தம்நூலில் கடைபிடித்து மாற்றத் தோடு
வள்ளுவனார் படைத்திட்டார் இன்பப் பாலில்
சங்கஅக இலக்கியத்தின் கருத்தைப் பிழிந்து
கற்பனையும் இன்சுவையும் அதனுள் சேர்த்து
பொங்கிவரும் காதலொடு ஊடல் கூடல்
பிரிவென்று பலவாறாய் பகுத்து வைத்து
திங்களொடு குளிர்காற்று ஒன்று சேர்ந்து
மேனியிலே படர்கின்ற இன்பம் போல
செங்கரும்பாய் வள்ளுவனார் விளக்கிச் செல்லும்
சேதியினை அவையோர்க்குச் சொல்ல வந்தேன்.
ஐந்திணையின் செய்திகளை இருபத் தைந்து
அதிகாரச் செய்யுளிலே புகுத்தி வைத்து
முந்துறுத்தும் களவோடு கற்பு என்னும்
அகவாழ்வின் செய்திகளை அழகாய் தந்தார்
சிந்தையிலே ஊறிவரும் ஆசை யாலே
பிறர்பொருளை அவரறியா கவரு தல்போல்
விந்தைமிகு மாற்றத்தால் மாந்தர் உள்ளம்
கவர்ந்திழுக்கும் செயலுக்கு களவு என்பர்.
மனதோடு உடல்சேரும் சேர்க்கை தன்னை
கற்பென்று பெயர்சொல்லி அழைப்பார் சான்றோர்
இனம்புரியா ஓர்உணர்வாய் பருவ வயதில்
யாவர்க்கும் வருகின்ற காதல் வாழ்வை
இன்பத்துப் பால்வழியே விரிவாய்ச் சொல்லி
உள்ளத்தில் அன்புணர்வைத் தூண்டச் செய்தார்
மனம்விரும்பி நான்உணர்ந்த செய்தித் தொகுப்பை
விரிவாகப் பாடலிலே காண்போம் வாரீர்
இருநோக்கு கொண்டவளின் அன்பைப் பெறவே
நோய்நோக்கி இருந்தவனின் செயலைக் கண்டேன்
கருவிழிகள் மையுண்டு வேலாய் நின்ற
இமைபேசும் மௌனத்தின் புரிதல் கண்டேன்
ஒருபெண்ணின் மேனியிலே ஐந்து புலனும்
அனுபவிக்கும் இன்பசுவை இருக்கக் கண்டேன்
மருந்தாக உடல்நோய்க்கு பலவும் இருக்க
தன்னோய்க்கு மருந்தாக அவளைக் கண்டேன்.
மலரன்ன மேனியினைக் கொண்ட நங்கை
பிரிவுற்ற காலத்தில் பசலைப் பூப்பாள்
மலர்களிலே அனிச்சம்பூ முகர்ந்தால் வாடும்
அம்மலரை மித்திதாலே பாதம் நோகும்
மலர்க்காம்பு நீக்காத மலரைச் சூடி
மங்கையவள் நுசுப்பொடிந்த நிலையைக் கண்டேன்
மலரான மங்கைமுகம் கண்ட மலர்கள்
நாணத்தில் தலைகுனிந்து நிலனை நோக்கும்.
பாலோடு தேன்கலந்த சுவையைப் போல
பெண்மகளின் வாய்ச்சுவையும் இருக்கக் கண்டேன்
வேலன்ன விழிபடைத்த பெண்ணின் தொடர்பு
உடலோடு உயிர்கொண்ட தொடர்பே யாகும்
பால்கூட சூடாகக் குடிப்ப தில்லை
என்னவளோ என்நெஞ்சில் இருப்ப தாலே
நூலன்ன இடைகொண்ட பெண்ணின் கண்கள்
மைபூசும் தொழில்மறக்கும் காத லராலே.
பிரிவென்று சொன்னாலே நெஞ்சம் பதரும்
எனைபிரிந்து சென்றாலோ உயிரோ விலகும்
இருக்கின்ற காலத்தில் இன்பம் மகிழ்ந்தேன்
இல்லாத காலத்து நினைவால் எரிந்தேன்
பிரியேன்என் றவன்பிரிந்தான் அவனோ டழகும்
சுடரில்லா நிலவுபோல தேயக் கண்டேன்
நெருப்பிலிட்ட கொழுப்புபோல் உள்ளம் உருகும்
பிரிந்தாரைச் சேர்ந்தாலே மழையில் நனையும்
வான்பார்க்கும் நெற்பயிர்போல் நான்பார்த்து இருந்தேன்
கோடைமழைக் கொட்டிவிட முழுவதுமாய் நனைந்தேன்
தேனாக இனிக்கின்ற சொல்லின்பம் கண்டு
நூலாக இளைத்தஉடல் முழுமதியாய் மாறும்
மானாகத் துள்ளிவரும் இளநெஞ்சே நில்லு
மீண்டமவர் பிரிவாரோ எனக்கேட்டுச் சொல்லு
மீன்விழியைக் கொண்டவளை இனிபிரிய மாட்டேன்
நெஞ்சுக்குள் உனைவைத்தேன் உன்னோடு வாழ்வேன்.
வாழும் மாந்தர் நல்வழி சென்றிட
வேண்டி அவர்க்கு சொல்வழி தந்தவர்
கோழை மாந்தர் கொள்கையில் வாழ்ந்திட
வீரம் மிகுந்த ஊக்கியாய் இருந்தவர்
பாழ்செய் குற்றம் பாரினில் செய்தவர்
உள்ளம் மாற நன்னெறி வகுத்தவர்
வீழும் உள்ளம் கொண்டவர் நிமிர்ந்திட
வாழ்க்கை பாதை சொன்னநம் வள்ளுவர்.
ஆணும் பெண்ணும் அன்பால் இணைந்து
அகிலம் போற்றும் காதல் வாழ்வை
பேணும் முறைகள் வரிசை படுத்தி
ஊடல் கூடல் பிரிதல் என்று
ஆன்றோர் முன்னோர் சொன்ன முறையில்
அழகாய் சொல்லி விளங்க வைத்தார்
சான்றோன் நமக்குத் தந்த குறளைக்
கற்று வாழ்வில் உயர்வோ மாக.
Sunday, March 17, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment