Thursday, December 12, 2024

UGC announces UG CUET exam changes


UG CUET தேர்வு மாற்றங்களை அறிவித்தது UGC

அடுத்தாண்டு முதல், க்யூட் இளநிலை பொது நுழைவுத்தேர்வை கணினி வாயிலாக எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான, க்யூட் எனப்படும், பல்கலை பொது நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு முதல் க்யூட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழு நடத்தும் இந்த தேர்வு, முதன்முறையாக நடத்தப்பட்ட போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதிக்கப்பட்டது.

இதுதவிர, ஒரு பாடத்திற்கான தேர்வு, பல ஷிப்ட்களில் நடத்தப்பட்டதால் முடிவுகளை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

நடப்பாண்டு முதல் இந்த தேர்வு, ஹைப்ரிட் எனப்படும் விடைத்தாள் மற்றும் கணினி ஆகிய இரண்டு முறைகளிலும் நடத்தப்பட்டது. ஆனால், டில்லியில் மட்டும் தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன் ரத்து செய்யப்பட்டது.

இதுபோன்ற குழப்பங்களை போக்கவும், மாணவர்கள் எளிதில் தேர்வுகளை எழுதவும் க்யூட் தேர்வு முறையை மேம்படுத்த யு.ஜி.சி., முடிவு செய்தது.

இதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தன் பரிந்துரைகளை சமீபத்தில் யு.ஜி.சி.,யிடம் அளித்தது. இதன்படி, வரும் 2025ல் நடக்க உள்ள இளநிலை க்யூட் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, வரும் 2025ம் ஆண்டு முதல் கணினி வாயிலாக மட்டுமே இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பிளஸ் 2வில் தாங்கள் படித்த எந்த பாடத்தையும் ஏற்று, மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

இதேபோல் தேர்வுக்கான பாடங்களின் எண்ணிக்கையை 63ல் இருந்து 37 ஆக குறைத்து உள்ளோம். மேலும், கைவிடப்பட்ட பாடங்களுக்கு மாற்றாக, பொது திறனறித் தேர்வின் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அதிகபட்சமாக ஆறு பாடங்களுக்கு பதிலாக, ஐந்து பாடங்களை தேர்வு செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு செய்யும் பாடத்தைப் பொறுத்து, அதற்குரிய தேர்வுக்கான கால அளவு மாறுபடும். குறைந்தபட்சம், 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை அளிக்கப்படும்.

இதுவரை, இந்த தேர்வில் விருப்ப கேள்விகள் என்ற முறை இருந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் அனைத்து கேள்விகளும் கட்டாயமாக்கப்பட உள்ளன. இதேபோல், முதுநிலை பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வின் கால அளவு, 105 நிமிடங்களில் இருந்து, 90 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Post Comments

No comments:

Post a Comment

Back To Top