Thursday, December 12, 2024

Tamil Nadu Higher Secondary School Graduate Teachers Association - Report - 12.12.2024


தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிக்கை - 12.12.2024

பெறுநர்:

மதிப்புமிகு ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநர் அவர்கள், பள்ளிக்கல்வித் துறை,

பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகம், கல்லூரி சாலை, சென்னை 600 006.

மதிப்புமிகு ஒருங்கிணைந்த மாநில பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் அவர்களுக்கு, இனிய வணக்கங்கள்.

கீழ்காணும் மிக முக்கியமான பிரச்சனையை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அதில் தாங்கள் உடனடி கவனம் செலுத்தி எங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிடுமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

1 தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் தகைசால் பள்ளிகளில் இருந்து (School of Excellence) ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள் என்ற அடிப்படையில் 6, 7, 8, 9, 11 ஆம் வகுப்புகளில் இருந்து ஒரு பள்ளிக்கு 25 மாணவர்கள் என்ற அடிப்படையில் டிசம்பர் 26 இல் இருந்து, டிசம்பர் 30 வரையில், நடைபெற இருக்கும் முகாமிற்கு மாணவர்களை, பட்டதாரி ஆசிரியர்கள் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறோம்.

2. 6 ஆம் வகுப்பு மாணவர்களை மதுரைக்கும். 7 ஆம் வகுப்பு மாணவர்களை திருநெல்வேலிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை கோயம்புத்தூருக்கும் 9 ஆம் வகுப்பு மாணவர்களை சேலத்திற்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களை தஞ்சாவூருக்கும் அழைத்துச் செல்ல பணித்துள்ளீர்கள்.

3. மாணவர்களுக்கான இந்த பயிற்சி முகாம் நடத்துவதற்கும் அவர்களை ஆசிரியர்கள் அழைத்துச் செல்வதற்கும் - தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த காலநிலை சரியில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

டிசம்பர் 26 முதல் 30 என்ற இந்த காலநிலை கடும் குளிர் மற்றும் மழை காலமாகும். இந்த காலநிலை மாற்றம் மாணவர்களின் ஆரோக்கியத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

4. மேலும் கிறிஸ்மஸ் உள்ளிட்ட பண்டிகை காலமாகும். அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களை மாணவர்கள் சுகமாக தங்களின் பெற்றோர்களுடன் கழிக்க அனுமதித்திட வேண்டுகிறோம்.

5. மேலும் அம்மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்கும் மேலே கூறிய காரணங்கள் அனைத்தும் பொருந்தும் என்பதையும், மேலும் அரையாண்டுத் தேர்வின் விடைத்தாள்கள மதிப்பிடும் பணியினை ஆசிரியர்கள் இந்த விடுமுறையில் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆகவே மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் டிசம்பர் 26 முதல் 30 வரை நடத்த இருக்கும் மாணவர்களுக்கான பயிற்சி முகாமை அருள் கூர்ந்து தள்ளிவைத்து, அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்த பிறகு, 2025 ஜனவரி கடைசி வாரத்தில் நடத்திட ஆவன செய்யுமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

நன்றி! வணக்கம்.

Post Comments

No comments:

Post a Comment

Back To Top