தொண்டூர் முதலாகத் தோன்றிய ஆற்றினை
தொண்டியாறு என்றனர் நீர்வரும் - இந்த
நதியின் குறுக்கே இரண்டணை கண்டார்
இரட்டணை என்றார் பெயர். 01
தொண்டூரிலிருந்து தோன்றி வருகின்ற ஆற்றினை தொண்டியாறு என்றனர். தண்ணீர் வரும் இந்த ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளைக் கண்டவர்கள் இரட்டணை என்று பெயரிட்டு அழைத்தனர்.
வேற்றுமையின் ஒற்றுமையாய் வாழ்ந்திடும் இந்தியர்போல்
வேறுபட்ட மக்கள் இனத்தவர் - சேர்ந்து
உறவினர் போல தமதுதொழில் செய்து
சிறப்புடன் வாழும்நல் ஊர் 02
வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் இந்தியர்களைப் போல, வேறுபட்ட இனத்து மக்கள் அனைவரும் கூடி, உறவினர்கள் போல தம்முடைய தொழில்களைச் செய்து சிறப்பாக வாழும் நல்ல ஊர்.
கிழக்கிலும் மேற்கிலும் ஆறுகள் இங்கு
உழவுத் தொழிலே முதன்மை - கழனி
முழுதும் பயிர்வகை நல்ல பசுமை
செழிக்கும் வயல்கள் உள 03
இரட்டணை என்ற ஊரின் கிழக்கில் தொண்டி ஆறும் மேற்கில் சங்கராபரணி ஆறும் பாய்ந்தோடுகின்றன. இங்கு வாழும் மக்கள் உழவுத் தொழிலை முதன்மையாகச் செய்து வருகின்றனர். இங்குள்ள நன்செய், புன்செய் நிலங்கள் அனைத்திலும் பயிர்வகைகள் செழித்து, பசுமையாகக் காணப்படும்.
தெருக்கள் முழுவதும் ஓரின மக்கள்
நிறைந்துடன் வாழ்ந்ததால் அந்த - தெருக்கள்
பெயரும் இனத்தின் பெயரில் அமைந்து
நயமாய் இருப்பது காண் 04
இவ்வூரில் வாழும் ஓரின மக்கள் அனைவரும் ஒரே தெருவில் கூடி வாழ்ந்ததால், அந்த வீதியின் பெயரும் அம்மக்கள் இனத்துப் பெயரிலேயே அமைந்து இருப்பதைக் காணலாம்.
வெண்ணியங்கா ளம்மன் திரௌபதி மாரிகங்கை
கன்னிமார் பச்சைவாழி அம்மன் - அனுமன்
பெருமாள் முருகன் சிவன்ஐயனார் ஐங்கரன்
வள்ளலார் கோவில்கள் உண்டு 05
இவ்வூரில்,வெண்ணியம்மன், அங்காளம்மன், திரௌபதியம்மன், மாரியம்மன், கங்கையம்மன், கன்னிமார், பச்சைவாழி அம்மன், அனுமன், பெருமாள், முருகன், சிவன், ஐய்யனார், விநாயகன், வள்ளலார் கோவில்கள் உள்ளன.
அறிவு புகட்டும் நிறுவனங்கள் கூடி
பெருமைசேர்க்கும் கல்வியைத் தந்திடும் - கற்றோர்
நிறைந்த கவின்மிகு ஊரில் தனியார்
அரசுபணி செய்வோர் மிகை. 06
அறிவினைப் புகட்டுகின்ற கல்வி நிறுவனங்கள் இங்கு மிகுதி. இவை அனைத்தும் இந்நகரைச் சுற்றியுள்ள மக்களுக்குக் கல்வியைத் தந்து, அறிவு உடையவர்களாக ஆக்கி பெருமை சேர்க்கின்றன. கற்றவர்கள் மிகுதியாக உள்ள, அழகு மிகுந்த இவ்வூரில், அரசுப்பணி, தனியார் பணி செய்வோர் மிகையாக உள்ளனர்.
உற்றார் உறவினர் கூடிவாழ்வர் கோவில்
திருவிழா என்றால் பகிர்ந்துசெய்வர் - உறவாய்
பலஆயி ரம்பேர் இருப்பினும் தத்தம்
தலைவர்கள் சொல்கேட்பார் நன்று. 07
இவ்வூரில், சொந்த பந்தங்கள் அனைவரும் கூடி வாழ்வர். கோவில் திருவிழாக்கள் என்றால் அனைவரும் பகிர்ந்து செய்வர். உறவினர்களாக பல ஆயிரம் மக்கள் இருப்பினும் அவரவர் தலைவர் சொல்கேட்டு அதன்வழி நடப்பர்.
தினக்கூலி பல்வியா பாரம் நெசவாசான்
பண்டை குலசுய கைத்தொழில்கள் - முன்னோர்
மரத்தொழில் ஓட்டுநர் ஓதுவா ரோடு
அரசியல் மாந்தர் உளர் 08
தினக்கூலி, பல வியாபாரங்கள், நெசவு, ஆசிரியர், பண்டைய குலத்தொழில், சுயத்தொழில், கைத்தொழில்கள், மரத்தொழில், ஓட்டுநர், ஓதுவார், அரசியல் வாதிகள் என முன்னோர்கள் செய்த பல தொழில்களையும் இவ்வூர் மக்கள் செய்து வாழ்கின்றனர்.
கொய்யாமாந் தோப்புகளில் புள்ளினங் கள்வாழும்
தென்னை பனைவாழை தன்னில் - அணில்களோடி
ஆடும் சவுக்கு மரத்தோப்பில் சிட்டினங்கள்
கூடும்பல் தோப்புகள் உண்டு. 09
கொய்யா, மாந்தோப்புகளில் பறவையினங்கள் கூடுகட்டி வாழும். தென்னை, பனை முதலான தோப்புகளிலும் வாழைத் தோட்டங்களிலும் அணில்கள் ஓடி ஆடும். சவுக்கு மரத் தோப்புகளில் சிட்டினங்கள் கூடுகட்டி ஒன்றோடு ஒன்று கூடும். இத்தகைய தோப்புகள் இங்கு உள்ளன.
காந்திய கொள்கையைப் பாட்டிலே வைத்தவர்;
காந்தி புராணத்தைப் பாடிய - ஏந்தல்;
விடுதலை பெண்கல்வி கொள்கையாய் கொண்ட
அசலாம் பிகைபிறந்த ஊர். 10
காந்தியின், அகிம்சை முதலானக் கோட்பாடுகளைத் தன்னுடைய பாட்டில் வைத்துப் பாடியவர். காந்தி புராணம் என்ற நூலை இயற்றிய புகழுக்குடையவர். விடுதலை, பெண்ணுரிமை, பெண்கல்வி ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்ட அசலாம்பிகை பிறந்த ஊர் இரட்டணை.
No comments:
Post a Comment