ஓரறி வுமுதலா மண்ணில் பிறந்து மனிதரானோம்
பாரினில் தோன்றிய ஏனை உயிரின் வேறானோம்
சீரிய அறிவுடன் சிந்தித் தறிதல் பெற்றுள்ளோம்
தாரினில் நெருங்கிய வாழைப் பழம்போல் சேர்ந்திருப்போம் 01
ஓரறிவு முதலாக ஆறறிவு ஈறாக உள்ள அனைத்து உயிர்களாகவும் பரிணாம வளர்ச்சி பெற்று, இப்போது மனிதராக பிறந்து வந்துள்ளோம். உலகில் தோன்றிய மற்றைய உயிரினங்களில் இருந்து வேறாகி, பேசும், சிரிக்கும் திறன்களோடு, சிறப்பான அறிவுடன் சிந்திக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளோம். அத்தகைய குணங்களைக் கொண்ட நாம், வாழைப்பழத்தின் நெருங்கிய பழம்போல சேர்ந்து வாழ்வோம்.
சேர்ந்தா ரோடு உண்மை யாக பழகிடுவோம்
நேர்த்தி யாக உண்மை பேசி உயர்ந்திடுவோம்
கூர்சிந் தனையை நல்ல செயற்கு செலவழிப்போம்
ஏரை உழுது பயிர்கள் செய்து வளம்பெறுவோம் 02
நாம் சேர்ந்திருக்கும் மனிதர்களோடு உண்மையாகப் பழகுவோம். ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையைப் பேசி உயர்த்திடுவோம். ஆற்றல் மிகுந்த சிந்தனையை நல்ல செயல்களுக்குச் செலவழிப்போம். ஏர் பூட்டி உழது நல்ல முறையில் பயிர்கள் வளர்த்து வளம்பெறுவோம்.
வளம்தரும் கல்வி சிறப்புடன் கற்று பயன்பெறுவோம்
குளங்களைத் தோண்டி வரும்புனல் காத்து பருகிடுவோம்
களையென தீய ஒழுக்கமும் நீக்கி சிறந்திடுவோம்
இளமையில் நல்ல உடல்வளம் பெற்று மகிழ்ந்திடுவோம் 03
வளமான வாழ்வைத்தரும் கல்வியினைச் சிறப்பான முறையில் கற்று பயன்பெறுவோம். குளங்கள் அமைத்து பொழிகின்ற மழைநீரைக் காத்துப் பருகிடுவோம். நல்ல விளைச்சலைத் தடுக்கின்ற களைகளாய் உள்ள தீய ஒழுக்கங்களை நீக்கி சிறப்பான முறையில் வாழ்ந்திடுவோம். உடலுக்குக் கெடுதல் தரும் உணவுகளை உண்ணாமல் நல்ல உணவுகளை உண்டு இளமையிலேயே நல்ல உடல்வளம் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம்.
மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை வாழ முயன்றிடுவோம்
நிகழ்ந்த வற்றை மறக்க நாளும் பழகிடுவோம்
முகத்திற் கெதிரே புகழ்வார் விட்டு ஒதுங்கிடுவோம்
அகத்தைப் பார்த்து பழகும் நண்பர் ஏற்றிடுவோம் 04
பல்வேறு மனக் கவலைகளைத் தரும் செயல்பாடுகளை நீக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள். மேலும் நடந்த தீய செயல்களை மறந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். நம்முடைய முகத்திற்கு எதிரே புகழ்ந்து பேசும் மனிதர்களை விட்டு ஒதுங்கி வாழுங்கள். நம் மனதைப் புரிந்து கொண்டு பழகும் நண்பர்களை ஏற்று வாழங்கள்.
ஏற்றிவிட்ட ஏணிப் படியை மறவா திருப்போம்
போற்றுகின்ற உறவை விட்டு விலகா திருப்போம்
தூற்றுகின்ற மனித ரோடு சோரா திருப்போம்
நாற்றுபோல சேர்ந்தா ரிடத்தும் மகிழ்ந்து இருப்போம் 05
நாம் உயர்ந்த இடத்திற்குச் செல்ல ஏணிப்படிகளாய் இருந்தவர்களை மறவாதிருப்போம். நம்மைச் சுற்றியுள்ள உறவுகளை விட்டு விலாகாதிருப்போம். நம்மைத் தவறாகச் சித்தரிக்கும் மனிதர்களோடு சேராதிருப்போம். பிடுங்கி நடும் நாற்றுகளைப் போல, நாம் சேர்ந்து வாழும் இடத்தில் மகிழ்ச்சியாக வாழ்வோம்.
இருப்பது போதும் என்ற மனதில் வாழ்ந்துவிடு
தருகிற எண்ணம் நாளும் வளர்க்கப் பழகிவிடு
உரிமைகள் இருந்தும் கிடைக்கா விட்டால் விட்டுவிடு
சரியென நினைத்தால் பயந்து விடாமல் செய்துவிடு 06
நம்மிடம் உள்ள பொருளைக் கொண்டு, போதும் என்ற மனநிலையோடு வாழ்ந்திடு. அடுத்தவர்களுக்கு உதவுகின்ற எண்ணங்களை வளர்க்க ஒவ்வொரு நாளும் பழகிக்கொள். உனக்கு உரிமைகள் இருந்தும் கிடைக்கவில்லை என்றால் அதனைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் விட்டுவிடு. சரியென்று உனக்குத் தெரிந்தால் எந்த நிலையிலும் பயப்படாமல் அதனைச் செய்.
செய்யும் தொழிலே தெய்வம் என்று மதித்துச்செய்
பொய்யும் ஏய்ப்பும் நீக்கி வாழ பழகிக்கொள்
மயக்கம் கொடுக்கும் வார்த்தை தெரிந்து ஒதுங்கிக்கொள்
நியாயச் செயலை கொள்கை யாக கடைபிடித்துவாழ் 07
நீ செய்கின்ற செயலையே தெய்வம் நினைத்து மதித்து செய்தல் வேண்டும். பொய்சொல்வதையும் பிறரை ஏமாற்றிப் பிழைப்பதையும் நீக்கி வாழப் பழகிக் கொள்ளவேண்டும். பிறர் சொல்வது, உன்னை ஏமாற்றும் அல்லது மயக்கம் வார்த்தைகள் எனத் தெரிந்தால் அந்த வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காமல் அதிலிருந்து நீ விலகிக் கொள்ளவேண்டும். உனக்குச் சரியென்று பட்ட செயல்களை உன்கொள்கையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
வாழ்தல் வேண்டி கொள்கை இலாமல் வாழாதே
ஏழ்மை உன்னை சூழ்ந்த போதும் நேர்மைகொள்
வீழ்ந்த போது குழந்தை போல அழதுவிடாதே
வாழ்ந்த மனிதர் பாதை அறிந்து வழிநடத்து 08
வாழ வேண்டும் என்பதற்காக எந்தக் கொள்கையும் இல்லாமல் வாழக்கூடாது. வறுமை உன்னை சூழ்ந்த போதும் நேர்மையாக வாழவேண்டும. வாழ்வில் தவறி விழுகின்ற காலங்களில் குழந்தையைப்போல அழக் கூடாது. நல்ல முறையில் வாழ்ந்த மனிதர்களின் பாதையை பின்பற்றி வாழ்வை நடத்தவேண்டும்.
வள்ளுவர் குறள்வழி வாழ்வை நடத்தி சிறந்திடுவோம்
வள்ளலார் நெறியினைப் பொன்னாய் மதித்து செயல்படுவோம்
பிள்ளைகள் மனதினை நன்றாய்ப் புரிந்து வளர்த்திடுவோம்
பிள்ளைகள் கல்வியை அச்ச மின்றி கற்கசெய்வோம் 09
திருவள்ளுவர் கூறும் திருக்குறளின் வழி, வாழ்க்கையை நடத்தி சிறப்பாக வாழ்வோம். வள்ளலார் கூறும் வாழ்வியல் வழிமுறைகளைப் பொன்போல மதித்து பின்பற்றுவோம். நம்முடைய பிள்ளைகளின் மனதினை நன்றாகப் புரிந்து கொண்டு வளர்த்திடுவோம். பிள்ளைகள் தாம் கற்கும் கல்வியினைத் தெளிவாக பயமில்லாமல் கற்க வழிவகைச் செய்வோம்.
கல்வி ஒழுக்கம் நம்மிரு கண்கள் காத்திடணும்
சொல்லும் சொற்கள் நல்லவை யாக இருந்திடணும்
நல்லவ ரோடு நட்பென பழகி கற்றிடணும்
நல்லோர் செயலை நலமுடன் செய்து புகழ்பெறணும் 10
கல்வியும் ஒழுக்கமும் நம்முடைய இரண்டு கண்களாகக் காத்திட வேண்டும். நாம் பேசுகின்ற, சொல்கின்ற சொற்கள் பிறருக்கு நன்மை தருவதாக அமைதல் வேண்டும். நல்லவர்களோடு நட்பு வைத்துக்கொண்டு பழகி, அவர்களின் நல்லப் பழக்க வழக்கங்களைக் கற்றிட வேண்டும. நல்லவர்களின் செயல்பாடுகளை நாமும் செய்து புகழ்பெற்று வாழ வேண்டும்.
No comments:
Post a Comment