Saturday, April 13, 2024

அழகிய வரதராசன் திருக்குறுந்தாண்டகம்


சங்கொடு சக்க ரங்கள்
கரங்களில் தாங்கி நின்றான்
பொங்கிய அமுதம் தன்னை
தேவரே பருகச் செய்தான்
திங்களும் உதித்து சாயும்
திசைகளில் ஆறு ஓடும்
மங்களம் நிறைந்த ஊரன்
இராசனைப் பணிந்தேன் நன்று 01

சந்திரனும் சூரியனும் தோன்றி மறையும் திசைகளான கிழக்கிலும் மேற்கிலும் ஆறுகள் செல்லும் மங்களம் நிறைந்த ஊரான இரட்டணையில் கோவில் கொண்டுள்ள, பாஞ்சசன்யம் என்ற வெண்ணிற சங்குகையும் சுதர்சனம் என்னும் சங்கரத்தையும் கைரங்களில் தாங்கிய, பாற்கடலைக் கடைந்தபோது பெருகி வந்த அமுதத்தை தேவர்கள் மட்டுமே உண்ணுமாறு செய்த, அழகிய வரதராசனை நன்முறையில் வணங்கினேன்.

மழைவரும் காலம் தன்னில்
மலையினைக் குடையாய்த் தாங்கி
எழிலுறும் கோலம் காட்டி
எருதுவும் பசுவும் காத்தான்
உழைத்திடும் மக்கள் வாழும்
இரட்டணை நகரில் மேவும்
அழகிய வரத ராசன்
அடியினைப் பணிந்தேன் நன்று 02

உழைக்கின்ற மக்கள் வாழும் ஊரான இரட்டணையில் கோவில் கொண்டுள்ள அழகிய வரதராசன், கோகுலத்தில் மழை வெள்ளம் தாக்கிய போது கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிப் பிடித்தும் தன்னுடைய அழகிய வடிவத்தைக் காட்டியும் எருதுகளையும் பசுக் கூட்டங்களையும் காத்தான். அத்தகைய இறைவனை நல்முறையில் பணிந்து வணங்குகிறேன்.

கொய்திடும் மலர்க ளோடு
துளசியை இணைத்துக் கட்டி
கயலினம் துள்ளி வீழும்
ஆறுகள் சூழ்ந்த ஊரில்
நயம்மிகு தோற்றம் கொண்டு
இருந்திடும் வரத ராசா
துயிலெழும் தருணம் பார்த்து
உன்னெழில் காண வந்தேன் 03

மீன் வகைகள் துள்ளி குதித்து ஓடுகின்ற தொண்டி மற்றும் சங்கராபரணி ஆறுகள் சூழ்ந்த ஊரான இரட்டணையில் அழகிய வடிவம் கொண்டிருக்கும் அழகிய வரதராசனே, செடி, கொடிகளில் இருந்து பறித்து எடுத்த மலர்களையும் துளசியையும் இணைத்துக் கட்டி, நீ தூங்கி எழும் அழகினைக் காண்பதற்காக வந்திருக்கிறேன்.

கிடந்துமி ருந்தும் நின்றும்
வந்திடும் அடியார் காத்தும்
பட்டிடும் துன்பம் போக்க
அவரவர் பாவம் நீக்கி
எட்டிடும் இன்பம் செய்து
எளியவர் காக்கும் தேவா
அடைக்கல மாக வந்து
உன்னிடம் தஞ்சம் ஆனேன் 04

கிடந்தநிலை, இருந்தநிலை, நின்றநிலை ஆகிய மூன்று நிலைகளில் காட்சி தந்து, உன்னை நாடி வரும் எளியவரான அடியவர்களைக் காப்பதுடன், அவரவர் படுகின்ற துன்பங்களைப் போக்க, அவரவரர் செய்த பாவங்களை நீக்கி, அனைவருக்கும் இன்பம் கிடைக்கும்படி செய்பவனே, உன்னையே அடக்கலமாகக் கொண்டேன் காத்தருள்வாய்.

பொய்வடி வாக வந்து
நஞ்சினை அமுதாய் ஊட்ட
மெய்வடி வாகச் செய்து
முக்தியும் தந்து காத்தாய்
பொய்யுடன் களவு நீக்கி
அகப்புற தூய்மை செய்து
மயக்கமும் ஒழித்து வந்தேன்
அடைக்கலம் தந்து காப்பாய் 05

கிருஷ்ணா கோகுலத்தில், அன்னை யசோதையின் வடிவை ஏற்று வந்து நஞ்சுண்ட பாலை உண்ணச் செய்த பூதகியின் உண்மையான வடிவம் தோன்றும்படியாக அவளின் உயிரை மாய்த்து முக்தி தந்து காத்தாய். பொய், களவு நீக்கி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்து ஆசை, காமம் முதலான மயக்கங்களை நீக்கி உன்னை நாடி வந்துள்ளேன். அடைக்கலம்.

தந்து காப்பாயாக.
வெண்ணிற பரிகள் பூட்டி
அனுமனின் கொடியும் கட்டி
பெண்மகள் சபதம் வெல்ல
சாரதி ஆன ராசா
எண்ணமும் செயலும் நல்ல
உள்ளமும் பெற்று வந்தேன்
விண்ணவர் போல என்னை
காத்திட வேண்டும் ஐயா 06

அழகிய வரதராச பெருமானே, வெள்ளை நிறத்து குதிரைகளைத் தேரில் பூட்டி, அத்தேரின் உச்சியில் அனுமனின் கொடியையும் கட்டி, திரௌபதியின் சபதம் வெற்றி பெறுவதற்காக, அர்ச்சுனனுக்குத் தேரோட்டியானாய். நல்ல எண்ணமும் மனமும் செயலையும் கொண்டு உன்னை நாடி வந்தேன். அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதுபோல் என்னையும் காத்திட வேண்டும்.

செண்பகம் மல்லி யோடு
செங்கழு நீரும் கொண்டு
மணம்கமழ் மாலை ஆக்கி
மகிழ்வுடன் கொண்டு வந்தேன்
புண்ணிய மூர்த்தி யான
அழகிய வரத ராசா
வெண்ணிற சங்கைப் போல
அடைக்கல மாகக் கொள்வாய் 07

செண்பகம், மல்லி, செங்கழுநீர் ஆகிய மணம் வீசும் பூக்களைக் கொண்டு மாலையாக்கி, மன மகிழ்ச்சியுடன் கொண்டு வந்துள்ளேன். வெள்ளை நிறத்தாலான பாஞ்சசன்யம் என்ற சங்கைக் கரத்தில் கொண்டு அதற்கு அடைக்கலம் தந்தது போல, எனக்கும் அடைக்கலம் தருவாயாக.

மானிடர் சினந்த நேரம்
மிருகமாய் மாறு கின்றாய்
மானிடர் போல ராசா
நரஅரி ஆன தேனோ?
ஊன்வரும் இன்பம் நீக்கி
உன்னையே நெஞ்சில் வைத்தேன்
தேன்விடும் வாசம் போல
உன்புகழ் பாடி நிற்பேன் 08

மனிதர்கள் கோபப்படும்போது மிருகம்போல நடந்து கொள்கின்றனர். இரட்டணையில் உறையும் அழகிய வரதராசனே, மனிதர்கள் போல கோபமுற்று நரசிங்கமாய் ஆனது ஏனோ? சதையினைத் தொடுவதால் வரும் இன்பங்களை (உடல் சுகம்) நீக்கி உன்னையே உள்ளத்தில் வைத்திருக்கிறேன். தேன், தன் மணம் வீசி பரப்புவது போல, நானும் உன் புகழைப் பாடிப் பரப்புவேன்.

பாலொடு தயிர்நெய் வெண்ணை
அனுதினம் திருடி உண்டாய்
கால்படும் இடத்துக் கல்லை
பெண்ணென ஆக்கித் வைத்தாய்
சேல்விழி மங்கை யோடு
பாற்கடல் இருக்கும் ராசா
மாலெனப் பேரைச் சொல்லி
வாசலில் வந்து நின்றேன் 09

சேல்கெண்டை மீன்போன்ற கண்களை உடைய திருமகளோடு பாற்கடலில் இனிது இருக்கும் அழகிய வரதராசனே. கோகுலத்தில் அன்னைக்குத் தெரியாமல் பால், தயிர், வெண்ணை, நெய் ஆகியவற்றைத் திருடி உண்டாய். இராமனாக வந்து உன் கால்பட்ட இடத்தில் இருந்த கல்லை பெண் உரு கொள்ளச் செய்தாய். நானும் திருமாலே என உன்பெயரைச் சொல்லி உன்னைக் காண வாசல்முன் வந்து நிற்கிறேன் காட்சி தருவாயாக.

மீன்உரு வாக வந்து
உயிர்வகை காத்து நின்றாய்
ஏனமாய் தோற்றம் கொண்டு
பூமியைக் கவர்ந்து வந்தாய்
தேனென இனிக்கும் ராசா
குடும்பமாய் நாங்கள் வந்து
மீன்விழி நங்கை யோடு
இருந்திடும் கோலம் கண்டோம். 10

மச்ச அவராதத்திலே பெரிய மீன் உருவம் கொண்டு பலவகையான உயிர்வகைகளைக் காத்தாய். வராக அவதாரத்தில் பன்றியின் வடிவம் கொண்டு சேற்றில் புதைந்த பூமியை மீட்டு வந்தாய். தேன்போன்று இனிமை பயக்கும் அழகிய வரதராசனே நாங்கள் குடும்பத்துடன் வந்து, மீன்போன்ற விழிகளைக் கொண்ட திருமகளோடு இருக்கும் திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்தோம்.

தொண்டியா றுபாயும் ஊராம்
இரட்டணைப் பதிக்கு வந்து
விண்ணவர் அமிழ்தம் உண்ண
புறமுது கிட்டு நின்றோன்
வணங்கிட அரங்கம் கச்சி
திருமலை சென்று வந்த
புண்ணியம் கிடைக்கு மன்றோ?
வாருமின் வணங்கி நிற்போம் 11

தொண்டியாறு பாய்ந்து வளப்படுத்தும் ஊரான இரட்டணைக்கு வந்து தேவர்கள் அமிழ்தம் உண்பதற்காகத் தன்னுடைய முதுகினைக் காட்டி நின்ற அழகிய வரதராசனை வணங்க, திருவரங்கம், காஞ்சிபுரம், திருமலை (திருப்பதி) ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள இறைவனை வணங்குவதால் வரும் புண்ணியங்கள் கிடைக்கும். வாருங்கள் அவ்விறைவனை வணங்குவோம்.

நெருப்பெனும் பாணம் எய்தி
தாடகை உயிரைக் கொன்ற
பெருமுலை நஞ்சைப் பூசி
பருகிட செய்ய வந்த
கருநிற அரக்கி மாய்த்த
அழகிய வரத ராசன்
திருப்பதம் பணிந்தா ருக்கு
வாழ்வினில் துன்பம் இல்லை 12

நெருப்புப் பாணங்களை எய்து, பெண்தன்மையற்ற தாடகியைக் கொன்றவனும் தன் பெரிய மார்பகத்தில் நஞ்சு தடவி, அமுது பருகச் செய்ய வந்த தாய்மை குணங்களற்ற பூதகியைக் கொன்றவனுமாகிய அழகிய வரதராசனின் திருப்பாதங்களைப் பணிந்தவர்களுக்கு வாழ்வில் துன்பம் என்பதே வாராது.

நெஞ்சினில் வஞ்சம் நீக்கி
நெருங்கினார் உண்மை பேசி
மிஞ்சிடும் அன்பு காட்டி
மகிழ்வுடன் வாழ்ந்து வந்தால்
தஞ்சமாய் வந்தார் காக்கும்
அழகிய வரத ராசன்
நெஞ்சினில் உன்னை வைத்து
பிறவிநோய் நீக்கிக் காப்பான் 13

தன்னிடம் தஞ்சம் என்று வந்தவர்களைக் காக்கும் இயல்புடைய அழகிய வரதராசன், உள்ளத்தில் வஞ்சம் இல்லாமல் தன்னை நாடி வருபவர்களிடம் உண்மையாகப் பேசி, அவர்கள் பெருமைகொள்ளும் அளவிற்கு அன்பு காட்டி, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர்களை, தன் உள்ளத்தில் வைத்துக் காப்பதோடு மட்டுமல்லாமல் பிறவி நோயை நீக்கி மீண்டும் மண்ணில் பிறவா நிலையை அடையச் செய்வான்.

அழகிலே சிறந்த பெண்கள்
அரம்பையர் முதலோர் வெட்கும்
அழகினை ஒருங்கே பெற்று
மோகினி வடிவம் கொண்ட
அழகிய வரத ராசன்
புகழினை மகிழ்ந்து பாடி
வழிவழி யாக வந்து
அருளினைப் பெற்று வாழ்வோம் 14

அழகில் சிறந்த பெண்களான இரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை முதலான அரம்பையர்கள் வெட்கம் கொள்ளும் அளவிற்கு பெண்களுக்கான அனைத்து அழகுகளையும் முழுமையாகப் பெற்று மோகினியாக உருவம் கொண்ட அழகிய வரதராசனின் புகழினை மகிழ்வுடன் பாடி, வழிவழியாக அவனது அருளைப் பெற்று வாழ்வோமாக.

மதுவினை அழித்த மாயோன்
வேய்ங்குழல் இசையைக் கேட்டு
குதிரையின் தலையைப் பெற்று
மனிதரின் உடலைக் கொண்டோன்
அதிர்கிற ஓசை கொண்ட
கின்னரம் மறந்தான் மீட்ட
சதாஇசை மிதுனம் பாடார்
நாரதர் மகதி விட்டார் 15

மது என்னும் அரக்கனை அழித்த மாயவனின் புல்லாங்குழல் இசையைக் கேட்டு, குதிரையின் முகமும் மனித உடலும் கொண்ட கின்னரர் அதிர்கின்ற ஓசை எழுப்பும் தங்களின் கின்னரம் என்னும் இசைக் கருவியை இசைக்க மறந்தனர். சதா என்னும் இசைக்கருவியை இசைக்கும் மிதுனங்களும் பாட மறந்தனர். மகதி என்ற வீணையை நாதரர் மீட்ட மறந்தார்.

வசீகர பெயர்கள் என்றும்
நவீனமா னபெயர் என்றும்
அசைசொலாம் பொருள்க ளற்ற
புரிந்திடா நாமம் வைத்து
பசங்களை அழைக்கின் றீர்கள்
அதனினால் பலன்கள் உண்டோ
கேசவன் பெயரை வைத்து
நரகமும் நீங்கி வாழ்வீர். 16

கவர்ச்சியான இக்காலத்துக்கு ஏற்ற பெயர்கள் என்று உங்களுடைய குழந்தைகளுக்கு பொருளற்ற அசைச் சொற்களால் பெயர்களை வைத்து, அதன் பொருளும் புரியாமல் அழைத்து மகிழ்கிறீர்கள்! அப்பெயர்களால் உங்களுக்கு ஏதேனும் பயன் உண்டோ? நாராயணனின் பெயரை வைத்து அழைத்தால் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நரகம் செல்லாமல் இருக்கலாம் அல்லவா?

வயல்வெளி பயிர்கள் காட்டும்
வளியினம் குளிரைக் கூட்டும்
நயமிகு வார்த்தை பேசி
உறவுடன் வாழும் மக்கள்
செயல்களில் தீமை இன்றி
உழைப்பையே நம்பி வாழ்வர்
கயல்விழி அன்னை யோடு
ராசனார் இருக்கும் ஊரே 17

அழகிய வரத ராசனார் மீன்போன்ற விழிகளையுடைய தன் தேவியுடன் உறையும் ஊரான இரட்டணையில், வயல்வெளிகளில் பயிர் வகைகள் செழித்து வளர்ந்திருக்கும். அதன் காரணமாக குளிர்ச்சியான காற்றே அங்கு வீசும். அந்நகரில் வாழும் மக்கள் நயமான வார்த்தைகளையே பேசி தம் உறவினர்களுடன் கூடி, யாருக்கும் தீங்கு செய்தல் இன்றி உழைப்பையே நம்பி வாழ்வர்.

வேடுவன் குகனை நான்காம்
தம்பியாய் இணைத்துக் கொண்டாய்
தேடிடும் செயலைச் செய்த
அனுமனை ஐந்தாய் ஏற்றாய்
வீடணன் அன்பைக் கண்டு
அறுவறாய் ஆக்கிக் கொண்டாய்
பாடியே பணிந்தேன் உன்னை
எழுவறாய் ஏற்றுக் காப்பாய் 18

வேட்டையாடும் தொழிலைச் செய்யும் குகனை நான்காவது தம்பியாகவும் சீதையைத் தேடிக் கண்டு பிடித்த அனுமனை ஐந்தாவது தம்பியாகவும் பகைவன் வீட்டில் இருந்து கொண்டு உன் மீது அன்பு வைத்த காரணத்தால் இராவணன் தம்பி வீடணனை ஆறாவது தம்பியாகவும் ஏற்றுக் கொண்டாய். உன்மீது அன்பு கொண்டு உன்னையே பாடிப் பணிந்தேன். என்னை ஏழாவது தம்பியாக ஏற்றுக் காப்பாயாக.

சுடர்விடும் கதிரோன் போல
பேரொளி கொண்டு நின்றாய்
உடைகளில் பச்சைப் பட்டு
உடுத்தியே காட்சி தந்தாய்
தடையிலா அருளைத் தந்து
பணிந்தவர் காத்து நின்றாய்
கிடைத்திடும் பொருளைக் கொண்டு
வழிபட நானும் வந்தேன் 19

சுடர்விடும் கதிரவனின் ஒளியைப் போல பிரசாகமான தோற்றம் கொண்டு நிற்பவனே. பச்சை நிறத்திலான பட்டு ஆடையினை உடுத்தி காட்சிக் கொடுப்பவனே. உன்னைப் பணிந்தவருக்கு எவ்விதத் தடையும் இல்லாமல் அருளை வழங்கிக் காப்பவனே. என் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு நானும் உன்னை வழிவட வந்தேன்.

உடலினை மறைத்த ஆடை
அகற்றிட நினைத்த நேரம்
கடலினில் கிடந்த ராசா;
அபயமென் றழைத்த போது
திடுமென ஆடை தந்து
மானமும் காத்தாய்; தஞ்சம்
அடைந்திடும் அடியார் காத்து
குறைகளை நீக்க வேண்டும். 20

பாற்கடலில் பள்ளிகொண்ட அழகிய வரதராசா, துச்சாதனன் பாஞ்சாலி உடுத்தி இருந்த ஆடையைப் பற்றி அவிழ்த்த போது அந்த வினாடியே, அபயம் அபயம் என்று உன்னை அழைக்க, நீண்ட நெடிய ஆடையினை தந்து மானம் காத்தாய். அதுபோல உன்னை வந்து தஞ்சம் அடைந்திடும் அடியவர்களின் குறைகளை நீக்கி காக்க வேண்டும்

.#அழகிய_வரதராசன்_திருக்குறுந்தாண்டகம்
#இரட்டணை_நாராயணகவி

No comments:

Post a Comment