
அனுமனவன் உன்புகழைச் சொல்லச் சொல்ல
தாய்வயிற்றில் அமைதியாகக் கேட்டுப் பின்னர்
உன்பெயரைச் சொன்னதினால் துன்பம் காக்க
மண்ணுலகில் வேற்றுருவம் கொண்டு வந்தாய்
உன்பெயரை அனுதினமும் உச்ச ரிக்கும்
உன்பக்தன் என்மீது கருணை கொண்டு
என்பகைவர் செய்கின்ற சூழ்ச்சி யாவும்
எனைத்தாக்கி வீழ்த்திடாது காக்க வேண்டும் 01
பிரகலாதன் தன் தாய்வயிற்றில் இருக்கும்போது, அனுமான் உன்புகழைச் சொல்லச் சொல்ல அதனை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து, பிறந்து வளர்ந்தவுடன் உன் பெயரையே ஒவ்வொரு நாளும் உச்சரிக்க ஆரம்பித்தான். இதனை அறிந்த இரணிய கசிபு, தன் மகன் என்றுகூட பாராமல், பிரகலாதனுக்குப் பல்வேறு துன்பங்களைத் தர, தன்பெயரை உச்சரிக்கும் பாலகனைக் காப்பதற்காக மண்ணில் இல்லா உருவம் (நரசிங்கம்) கொண்டு அழித்தாய். நரசிம்மா, நானும் உன்பெயரையே ஒவ்வொரு நாளும் உச்சரிக்கின்றேன். உன்பக்தன் என்மீது கருணை கொண்டு என் பகைவர்கள் எனக்குச் செய்யும் சூழ்ச்சிகள் யாவும் என்னைத் தாக்கி அழித்திடாமல் காக்க வேண்டும்.
படைத்திடும் நான்முகற்கு கொப்பூழ்; அழிக்கும்
தொழில்செய் சிவனுக்கு வலப்புறம்;
படைவிழி கொண்டவளாம் செல்வ மகற்கு
இதயம்; இடமளித்த புரவலா,
இடையரின் குலவிளக்கே! மேயும் பொறிகள்
அடக்கி நற்காக்கும் பரமனே!
கடைப்பாதம் இடமளித்து துன்பம் விலக்கி
அடியேன் காத்துஅரு ளவேண்டுமே 2
படைப்புச் தொழிலைச் செய்கின்ற நான்முகனுக்கு கொப்பூழ் இடமாகவும் அழிக்குத் தொழில் செய்கின்ற சிவனுக்கு உடலில் வலப்பக்கத்தையும் செல்வ மகளாக விளங்கும் இலட்சுமிக்கு மார்பை இடமாக அளித்துக் காத்து வருபவனே. இடையர்களின் குலவிளக்கே. உலகத்துப் பொருட்களை எல்லாம் அனுபவிக்க அலைந்து கொண்டிருக்கும் ஐம்பொறிகளை அடக்கிக் காக்கும் பரம்பொருளே. எனக்கு வரும் துன்பங்களை நீக்கி கடைப்பாதத்திலாவது இடம் அளித்து காப்பாயாக.
பற்றற்ற துறவி கூட
பற்றுகின்ற பொருள்கள் உண்டேல்
பற்றற்ற குணத்தா னான
பரந்தாமா நீயே அன்றோ?
பிறப்புமுதல் தொடர்ந்து தாக்கும்
பொய்களவு காமம் நீக்கி
பற்றாக உன்னைக் கொண்டேன்
பாவங்கள் நீக்கிக் காப்பாய் 3
உலகப் பற்றுகளைத் துறந்த துறவிகள் கூட, பற்றிக் கொள்ள நினைக்கும் பொருள் ஒன்று உண்டெனில், பற்றுக்கள் அற்ற குணத்தை உடைய பரந்தாமனே, உன்னையன்றி வேறில்லை. ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து வந்து தாக்கிக் கொண்டிருக்கும் பொய், களவு, காமம் முதலானவற்றை நீக்கி பற்றுக்கொம்பாக உன்னையே பற்றிக் கொண்டேன். என் பாவங்கள் அனைத்தும் நீக்கி காப்பாயாக.
கரும்பொடு நெல்வகை விளைந்திடும் ஊராம் இரட்டணை
விரும்பிய தொழில்செயும் மானிடர் வசிக்கும் பதியிலே
திருமகள் உடனுறை அழகிய வரத ராசனே!
நெருங்கிடும் நோய்களைப் பனியென விரட்டிக் காத்திடு 4
கரும்பு மற்றும் நெல்வகைகள் விளைகின்ற ஊரான இரட்டணையில், தான் விரும்பிய தொழிலைச் செய்யும் மக்கள் வசிக்கும் இடத்தில், திருமகளுடன் உறைகின்ற அழகிய வரதராச பெருமானே. எங்களை நெருங்கி வந்து துன்புறுத்தும் நோய்களைப் பனியாக விரட்டிக் காத்திடுவாயாக.
படியேறி வருபவர்க்கு காட்சி தந்து
விடுக்கின்ற குறையெல்லாம் போக்கி நல்ல
உடல்நலமும் மனநலமும் தந்து காக்கும்
நெடியோனே வேங்கடவா! என்னைக் காக்க. 5
ஓங்கி உலகளந்து வேங்கட மலையில் உறையும் இறைவனே! உன்னைக் காண படியேறி வருபவர்களுக்கு உன் பேரழகைக் காட்டி, அவர்கள் சொல்கின்ற குறைகளை எல்லாம் போக்கி, அவர்களுக்கு நல்ல உடல் நலமும் மனநலமும் தந்து காப்பவனே. உன்னை வணங்கி நிற்கும் என்னையும் காப்பாயாக.
#வேங்கடவன்_காப்புமாலை
#இரட்டணை_நாராயணகவி
No comments:
Post a Comment