Tuesday, April 30, 2024

யாகசேனி பெருமகிழ்ச்சி மாலை



ஆசிரிய விருத்தம் (விளம் மா தேமா)

நெருப்பிலே சுட்ட தங்கம்
பொலிவுடன் திகழ்தல் போல
உருகிடும் நெய்யும் வித்தும்
எரிபொருள் ஆக்கி செய்த
துருபதன் யாகம் தன்னில்
திறம்பட வெளியே வந்த
கருநிற மேனி கொண்ட
எழிலுறும் தேவ நங்கை. 01

யாசர், உபயாசரைக் கொண்டு பிள்ளை வரம் வேண்டி துருபதன், நெய்யையும் விதைகளையும் கொண்டு எரிபொருளாக்கி செய்த யாகத்தீயில் இருந்து, நெருப்பில் சுட்டத் தங்கம் சுடர்விட்டு மின்னுவதுபோல, கருத்த நிறம் மேனி அழகுடன் தோன்றினாள் தேவ உலக நங்கை பாஞ்சாலி.

கொக்கொடு நாரை உள்ளான்
கெளுத்தியும் விராலும் உண்ணும்
திக்கெலாம் அலைகள் மோதி
தன்உரு தொலைந்தே போகும்
முகிலினம் தந்த பொய்கை
ஆடிய பெண்ணாய் இங்கு
அக்கினி எழுந்து சாந்த
முகத்துடன் காட்சி தந்தாள். 02

கொக்கு, நாரை, உள்ளான் ஆகிய பறவைகள் கெளுத்தி விரால் முதலிய மீன்களை உண்ணும். ஒவ்வொரு திசைகளிலும் அலைகள் வீசி கரையில் மோதி காணாமல் போகும். மேகம் தந்த மழைநீரைத் தாங்கி நிற்கும் பொய்கையில் நீராடி வெளியே வரும் பெண்ணாய், அமைதியான முகத்தோடு அக்கினியில் இருந்து வெளியே வந்தாள் திரௌபதி.

சுருண்டிரும் நெடிய கூந்தல்
தாமரை மலர்போல் கண்கள்
திரண்டிரும் நகில்க ளோடு
சிறுத்திரும் இடையும் மெல்ல
பரவிடும் மலரின் வாசம்
கவர்ந்திடும் ஒளியாய்த் தேகம்
திருமகள் இவள்தான் என்ற
அழகுடன் தோற்றம் கொண்டாள் 03

சுருண்ட நெடிய கூந்தலையும் தாமரை மலர் போன்ற கண்களையும் பருத்துத் திரண்ட மார்பகங்களையும் சிறுத்த இடையையும் காற்றில் மெல்லப் பரவிடும் நீலோத்பலம் மலரின் வாசத்தினையும் அனைவரையும் தன்வசப்படுத்தும் உடல் அழகினையும் பெற்று, திருமகளைப் போன்ற அழகுடன் தோன்றியாள் கிருட்டிணை.

தூண்டிலில் சிக்கு கின்ற
சிற்றிரை மீன்கள் போல
காண்பவர் கண்கள் எல்லாம்
கண்டதை ஒன்றே காணும்
வேண்டிய அழகு எல்லாம்
திறம்பட பெற்றி ருந்தாள்
நாணமும் மேலெ ழும்ப
நலினமாய் இருந்தாள் சேனி. 04

சின்ன இரைக்காக தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் மீன்களைப் போல யாகசேனியைக் கண்டவர்கள், காணுகின்ற ஒன்றைத் தவிர வேறெதையும் காணாமல் இருக்கும் அழகினைக் கொண்டவள். பெண்ணுக்குரிய நாணம் மிக்கவளாய் இருந்தாள் யாகசேனி.

பாண்டுவின் மூன்றாம் மைந்தன்
பர்க்குணன் மணமு டிக்க
வேண்டுதல் மூலம் பெற்ற
வேல்விழி நங்கை நல்லாள்
ஓணப்பிரான் இனிய நண்பன்
கொழுநனாய் மனதில் எண்ணி
காண்பொருள் அவனே எல்லாம்
நினைப்புடன் வளர்ந்து வந்தாள் 05

பாண்டுவின் மூன்றாம் மகனான அர்ச்சுனனுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பதற்காகவே யாகசேனியை வேண்டுதல் மூலம் பெற்றான் துருபதன் . யாகசேனியும், திருவோண நன்னாளில் பிறந்தவனான கிருட்டிணனின் நண்பனான அர்ச்சுனனைத் தன்னுடைய கணவனாகவே மனதுள் எண்ணி, தான் காண்கின்ற பொருளெல்லாம் அவனாகவே நினைத்து வளர்ந்து வந்தாள்.

திருமணப் பருவம் கண்டு
துருபதன் சேதி சொல்ல
தரணியில் உள்ள வேந்தர்
சுயவரம் கலந்து கொண்டு
இருக்கையில் அமர்ந்தி ருக்க
நினைப்பிலே உள்ள கள்வன்
இருப்பிடம் தேடித் தேடி
கண்களும் பூத்து நின்றாள் 06

திருமண வயதடைந்த யாகசேனியை மணம்முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திசைகளில் உள்ள அரசர்களுக்குச் செய்தி அனுப்பி சுயம்வர நாளை அறிவித்தான் துருபதன். சுயம்வரத்தில் கலந்த கொள்வதற்காகப் பல்வேறு திசைகளில் இருந்து வந்த அரசர்கள், அவர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருப்பிடத்தில் அமர்ந்திருந்தனர். தன் மனத்துள் நினைத்துக் கொண்டிருக்கும் யாகசேனி, அர்ச்சுனன் எங்கு அமர்ந்திருக்கிறான் என்று பார்த்துப் பார்த்து கண்கள் பூத்து நின்றாள்.

சுயம்வரம் வந்தோர்க் கெல்லாம்
சகோதரன் விதிகள் கூற
பயத்தினில் பலவேந் தர்கள்
பதுங்கியே பின்சென் றார்கள்
பயமிலா சிலவேந் தர்கள்
வில்லினை எடுத்தும் தொட்டும்
மயங்கிகீழ் வீழ்ந்தும் தோற்றார்
நாயகன் தேடி நின்றாள் 07

யாகசேனியின் சகோதரன் திட்டத்துய்மன், சுயம்வரத்தில் கலந்துகொள்ள இருக்கும் அரசர்களுக்கு சுயம்வரத்தின் விதிமுறைகளைச் சொல்லி முடித்தான். இதனைக் கேட்டதுமே பயத்தில் பல வேந்தர்கள் நம்மால் இது முடியாது எனப் பயந்து பின்சென்றனர். துனிவோடு சிலவேந்தர்கள் வந்து, அவை நடுவே வைக்கப்பட்டிருந்த வில்லினைச் சிலர் தொட்டுப் பார்த்துச் சென்றனர். சிலர் எடுக்க முயன்றனர். சிலர் எடுத்து நாண் ஏற்ற முயன்றனர். சிலர் நாண் ஏற்ற முயன்று மயங்கத்தில் வீந்தனர். இந்நிலையில், யாகசேனி தன்னுடைய தலைவனான அர்ச்சுனனைத் தேடியபடியே நின்றிருந்தாள்.

அந்தன வேட கொண்ட
ஆண்மகன் ஒருவன் வந்து
சிந்தையில் உதிக்கும் வண்ணம்
அவையினர் நோக்கி கேளீர்
அந்தனர் எடுத்து வில்லை
வளைத்திட லாமே என்றான்
வந்தவர் தோற்ற பின்னர்
விதியினில் தளர்வு செய்தார் 08

சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைவரும் தோற்ற நிலையில், அந்தனர் வேடத்தில் வந்த ஒருவன் அவையின் மத்தியில் வந்து அனைவரின் சிந்தனையை ஈர்க்கும் வகையில், சான்றோரே கேளுங்கள். அந்தனனான நான் வில்லினை வளைக்கலாமா என்றான். வந்த அரசர்கள் அனைவரும் தோற்றதினால், திட்டத்துய்மன் விதியினைத் தளர்த்தி, யார் வேண்டுமானாலும் வில்லை வளைக்கலாம் என்று கூறினான்.

அந்தன னாக வந்து
வில்லினை மெல்ல தாங்கி
மந்திர செயல்கள் போல
நாணினை வில்லில் ஏற்றி
அந்தரத் திலுள்ள மீனை
நொடியினில் வீழ்தி விட்டான்
வந்தவர் திகைத்தி ருக்க
வெற்றியைக் கையில் கொண்டான் 09

யாகசேனியின் சகோதரன் இவ்வாறு கூறியதும், அந்தனன் உருவில் வந்த அர்ச்சுனன் வில்லினை மெல்ல எடுத்து, மந்திரத்தால் நிகழ்வதுபோல நாணேற்றி, சுயம்வரத்திற்கு வந்தவர்கள் திகைப்புடன் பார்த்திருக்க அந்தரத்தில உள்ள மீன் இலக்கினை வீழ்த்தி வென்றான்.

வென்றவர் யார்தான் என்று
அறிந்திடா நிலையில் சேனி
வென்றிட ஒருத்தர் மட்டும்
தானென அறிந்து கொண்டு
புன்னகை ததும்ப வந்து
நாணமும் மேலெ ழும்ப
தன்கையில் இருந்த மாலை
அந்தனன் கழுத்தில் இட்டாள் 10

அந்தனர் உருவில் வந்து வெற்றி பெற்றவர் யார்? என அறிந்திடாத நிலையில் யோகசேனி, இந்த வில்லினை வளைத்து நாணேற்ற அர்ச்சுனனால் மட்டுமே முடியும். ஆகவே வந்திருப்பது அர்ச்சுனனாகத்தான் இருக்கமுடியும் என்று அறிந்து கொண்டு, புன்னகையோடு அருகில் வந்து தன் கையில் உள்ள மாலையை வெட்கம் மிகுந்தெழ அந்தனனின் கழுத்தில் அணிவித்தாள்.

No comments:

Post a Comment