Tuesday, April 16, 2024

திருமால் ஒருபா ஒருபஃது


ஒருபா ஒருபஃது என்பது, வெண்பா அல்லது அகவல் இவற்றில் ஏதெனும் ஒன்றில், பத்துப் பாடல்கள் அந்தாதித் தொடையில் பாடப்படுவதாகும். இந்நூல் திருமால் பற்றி ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது.

துன்பங்கள் கண்ட போதும் கலங்காதீர்;
மணிவண்ணன் பெயரைச் சொல்ல மறவாதீர்;
கூப்பிட்டக் குரலுக்கு வந்திடுவான்;
குறைக ளைந்து அவனருளைத் தந்திடுவான். 1

துன்பங்கள் வரும்போது கலக்கம் கொள்ள வேண்டாம். அத்தகைய துன்பமான நேரங்களில் மணிவண்ணனின் பெயரினைச் சொல்ல மறக்க வேண்டாம். நாம் கூப்பிட்ட குரலுக்கு நம்மை தேடி வந்திடுவான். நம்முடைய குறைகளைக் களைந்து அருள்புரிவான்.

தந்திரங்கள் செய்வதிலே வல்லவனை; தானென்ற
ஆணவங்கள் மாய்ப்பவனை; வேதங்கள் மீட்டெடுத்து
வந்தவனை; எப்போதும் நாம்தொழுதால்
துன்பங்கள் நெருங்காதே காலம் மூன்றில். 2

தந்திரங்களையும் மாயங்களையும் செய்வதில் வல்லவனானவன். தான் என்ற ஆணவம் கொண்டவர்களை அழிக்கக்கூடியவன். பிரம்மனின் வேதத்தை மீட்டுத் தந்தவன். அவனை எப்போதும் நாம் தொழுது வந்தால் மூன்று காலங்களிலும் துன்பங்கள் நம்மை நெருங்காது.

மூன்றடியாய் மண்கேட்டு; ஈரடியால் உலகளந்து;
வானுயர நின்றவனைத் தினந்தொழுது வருபவர்க்கு;
திருவாயால் கீதைமொழி சொன்னவனின்
அருளாலே சோதனைகள் ஒருநாளும் வாராதே. 3

மூன்றடி மண் வேண்டுமென்று கேட்டுப் பெற்று, இரண்டடியால் உலகை அளக்க வான் உயரம் நின்றவன். கீதையினை தனது திருவாயால் சொன்னவன். அவனைத் ஒவ்வொரு நாளும் வணங்கினால், அவன் அருள் கிடைக்கப் பெற்று துன்பங்கள் வராமல் தடுக்கப்படும்.

வாராது நோய்நொடிகள்; கடல்நடுவே நகர்புகுந்து
இராவணனின் செருக்கறுத்து வேங்கடத்துள்
நின்றவனை மனம்நினைந்து புகழ்பாடி வருபவர்க்கே. 4

கடலின் நடுவாக உள்ள இலங்கை நகருக்குச் சென்று இராவணனின் ஆணவத்தை அறுத்தெடுத்து மலையில் நின்ற வடிவாய் காட்சிதரும் திருவேங்கடவனை மனதில் நினைந்து அவன்புகழ்பாடி வருபவர்களுக்கு ஒருபோதும் நோய்நொடிகள் வருவதில்லை.

வருந்துன்பம் பறந்து போகும்; கோகுலத்தில்
நிரைகாத்த கோபியரின் குலவிளக்காம் கோவிந்தன்
புகழ்பாட; குறும்புகள் பலசெய்து
குழுசேர்ந்து திருடித் தின்பான் வெண்ணையே. 5

தன் நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்புகள் செய்து, வெண்ணை திருடி உண்பவனும் கோகுலத்தில் ஆநிரைகளைக் காத்து, கோபியர்களின் குல விளக்காய் விளங்குபவனுமான கோவிந்தனின் புகழினைப் பாடினால், வருகின்ற துன்பங்கள் கூட நம்மை வந்து சேராமல் பறந்துபோய்விடும்.

வெண்ணையுண்ட வாயாலே மண்ணுண்டு புவிகாட்டி
மண்ணுலகோர் தாம்உணர பரம்பொருளாய் நின்றவனின்
அடியார்க்கு அமுதூட்டி வாழ்பவர்கள்
நெடியாய வேங்கடவன் திருப்பதத்தை அடைவாரே. 6

வெண்ணை உண்ட வாயாலேயே மண்ணையும் உண்டு, அண்ட சராசரங்களையெல்லாம் அதில் காட்டி, பரம்பொருள் நானே என்ற உண்மையினை மண்ணில் வாழும் மக்கள் உணரச்செய்தவனின் அடியவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வாழ்பவர்கள், நின்ற கோலத்தில் காட்சிதரும் திருவேங்கடவனின் திருப்பாதத்தை அடைவார்கள்.

அடையாத துன்பங்கள் தந்தபோதும் தாங்கிடுவேன்;
இடையாளின் துன்பத்தில் பெரிதில்லை; வில்லேந்தி
துயர்தீர்த்த அருளாளா; நீஎந்தன்,
துயர்தீர்க்க மாட்டாயோ? உன்னையன்றி வேறில்லை. 7

என்னால் தாங்க இயலாத துன்பங்களை நீ தந்தாலும் நான் தாங்கிக் கொள்வேன். மெல்லிய இடையை உடைய சீதையின் துன்பத்தைவிட இத்துன்பம் பெரியதாக இருந்துவிடப் போவதில்லை. அச்சீதையின் துயரத்தையும் வில்லைக் கொண்டு தீர்த்துவைத்தவன். அப்படிப்பட்ட நீ என் துயரத்தைத் தீர்க்க மாட்டாயா? உன்னையன்றி என்னைக் காப்பார் யாருமில்லை.

வேறாகித் தூண்பிளந்து நின்பெயரைச் சொன்னவனின்
துயர்தீர்த்தாய்; தினந்தோறும் உன்பெயரை உச்சரித்தேன்;
ஆயிரமாம் துன்பங்கள் வந்தபோதும் கலங்கமாட்டேன்;
தாயாக எனைக்காக்க நீவருவாய்;
நெய்தானே உன்னுணவு; உன்மேனிக் காயாம்பூ. 8

மனிதனாகவும் விலங்காகவும் இல்லாமல் இரண்டும் கலந்து வேற்றுருவம் கொண்டு தூணினைப் பிளந்து உன்பெயரைச் சொன்னவனின் துன்பம் தீர்த்தாய். நானும் உன்பெயரை ஒவ்வொரு நாளும் உச்சரித்து வருகிறேன். எனக்கு எண்ணற்ற துன்பங்கள் வரும்போதும் கலங்கமாட்டேன். ஏனென்றால் தாயாக என்னைக்காக்க நீவருவாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நெய் உன்னுடைய உணவு. உன் திருமேனி நிறம் காயாம்பூ.

காயோடு கனியுண்டு கடுந்தவங்கள் வேண்டாமே;
ஓயாமல் அலைவீசும் பாற்கடலுள் உறைபவனை;
அடிதொழுது அறம்காத்தால் தீவினைகள்
படியாதே; பார்போற்றும் வைகுந்தம் ஆள்வாயே. 9

காய் கனிகள் உண்டு கடும்தவம் புரிய வேண்டாம். ஓயாமல் அலைவீசும் திருப்பாற்கடலில் பாம்பணையில் இருக்கும் பரந்தாமனை வணங்கி, அவனது அடியினைத் தொழுது, நற்செயல்கள் செய்துவந்தால், நமக்கு வரும் தீவினைகள் ஒன்றும் செய்யாது. அதுமட்டுமல்லாமல், உலக மக்கள் போற்றி வழிபடும் வைகுந்த வாசனை அடைவாய்.

ஆளுயரம் வளராத வாமனனை; வில்லேந்தி
கோலவிழி மங்கைதுயர் தீர்த்தவனை; சபைநடுவே
தங்கை மானம் காத்தவனை;
சங்கேந்தி நின்றவனை; தினம்போற்றி வாழ்வோமே 10

ஒரு சராசரி மனித அளவுகூட வளராத வாமனனை; வில்லைக் கையில் கொண்டு சீதையின் துயரங்கள் போக்கியவனை; அரசர்க் கூட்டத்தில் நடுவே தன்னுடைய தங்கையான திரௌபதியின் மானத்தைக் காத்தவனை; கையில் சங்கினைக் கொண்டுள்ளவனை; ஒவ்வொரு நாளும் வழிபடுவோம்.

No comments:

Post a Comment