Monday, April 15, 2024

மணிவண்ணன் திருஅங்கமாலை



வெளிவிருத்தம்
மீனுலவும் கருகடலுள் மீனுருவம் கொண்டானை - வணங்குமின்
மீனோடு தேன்கொண்டு குகன்காண வந்தானை - வணங்குமின்
மீன்விழியால் பகைமயக்கி தேவருண்ண செய்தாளை - – வணங்குமின்
மானொன்றால் துணையாளைத் தொலைத்தானை தலையேநீ – வணங்குமின் 01

தலையே, மீன்கள் உலவுகின்ற கருமையான கடலில் மீனாக அவதாரம் புரிந்தவனை; மீனும் தேனும் பரிசு பொருட்களாகக் கொண்டு, குகன் காண வந்தவனை; மீன்போன்ற விழிகளைக் கொண்டு பகைவர்களான அசுரர்களை மயக்கத்தில் ஆழ்த்தி தேவர்கள் அமிழ்தம் உண்ணச் செய்த மோகினையை; இராவணன் அனுப்பிய மாய மானினால் தன்னுடைய துணையாள் சீதையைத் தொலைத்துவிட்டு நின்றவனை; நீ வணங்குவாயாக.

செல்வமகள் அருகிருக்க பாற்கடலுள் இருந்தானை - காண்மின்
மலையேறிச் செல்பவர்க்கு எழில்காட்டி நின்றானை – காண்மின்
உலவுகின்ற காவிரிசூழ் அரங்கத்தில் கிடந்தானை - காண்மின்
உலகுண்டு வையம்காட்டி மகிழ்ந்தானை கண்களேநீர் – காண்மின் 02

கண்களே, செல்வத்தின் கடவுளாக விளங்கும் திருமகள் அருகிலே அமர்ந்திருக்க பாற்கடலுள் இருந்தவனை; மலையின்மீது ஏறி சென்று தன்னைக் காண வந்தவர்களுக்கு தன்னுடைய அழகினைக் காட்டி நின்றவனை; எல்லா இடங்களிலும் உலவிச் செல்லுகின்ற காவிரி ஆறு சூழ்ந்த திருவரங்கத்தில் பள்ளிக்கொண்டானை; மண்ணை உண்டு இந்த அண்டவெளிகளை எல்லாம் காண்பித்து மகிழ்ந்தவனை; நீங்கள் காணுங்கள்.

மலைவாழும் திருமுருகன் தாய்மாமன் புகழினை - கேண்மின்
மலைசூழ்ந்த இலங்கைக்கோன் மாய்த்தானின் புகழினை - கேண்மின்
வில்லொடித்து திருமகளை அடைந்தானின் புகழினை - கேண்மின்
மலைக்குடையோன் மணிவண்ணன் திருப்புகழை காதுகாள் –- கேண்மின் 03

காதுகளே, மலைகளில் உறைகின்ற திருமுருகனின் தாய்மாமன் புகழினை; மலைகள் சூழ்ந்த இலங்கை சென்று இராவணனை அழித்தவன் புகழினை; சிவதனுசு என்னும் வில்லை ஒடித்து திருமகளான சீதையை மனைவியாக அடைந்தவன் புகழினை; மலையைக் குடையாகப் பிடித்த மணிவண்ணன் திருப்புகழைக் கேளுங்கள்.

பிரம்மனின் வேதத்தை மீனாகி மீட்டவனை - பாடுமின்
வரம்தந்து ஒளிந்துகொண்ட முக்கண்ணன் காத்தானை - பாடுமின்
மருதமரம் ஆனஇரு அரக்கர்கள் அழித்தானை - பாடுமின்
செருகளைய மூன்றடிமண் கேட்டானை வாயேநீ - பாடுமின் 04

வாயே, படைப்புத் தொழில் செய்யும் பிரம்மனின் பிரம்மச் சுவடியை குதிரை முகம்கொண்ட அரக்கன் எடுத்துச் செல்ல அதனை மீன் வடிவம் கொண்டு மீட்டு வந்தவனை; சிவனிடம் நான் யார் தலையில் கை வைக்கிறேனோ அவர்கள் அழிந்துவிட வேண்டும் என்ற வரம்பெற்ற பத்மாசூரன் என்ற அரக்கன், வரத்தைச் சோதிக்க சிவன் தலையிலேயே கை வைக்க எண்ணினான். அவனிடம் இருந்து தப்பித்து சிவன் ஒரு குகையில் மறைந்து கொள்ள, சிவனைக் காப்பதற்காக மோகினி வடிவாக வந்து அரக்கனை அழித்தவனை, தன்னை அழிக்க மருதமரங்களாக இருந்த கூபரன், நளகூபரன் என்ற இரண்டு அரக்கர்கள் அழைத்தவனை, மாவலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழிப்பதற்காக வாமன அவதாரம் கொண்டு  மூன்றடி மண்கேட்டு வானும் மண்ணும் அளந்தவனை; நீ பாடு.

வானவர்கள் அமிழ்தமுண்ண மோகினியாய் வந்தவனை - நினையுமின்
வானரர்க்கு உதவிசெய்ய மராமரங்கள் துளைத்தவனை - நினையுமின்
கூன்நிமிரச் செய்தானை தந்தையின்சொல் தட்டானை - நினையுமின்
ஏனமுரு கொண்டானை வெய்யோனை மனமேநீ - நினையுமின் 05 

மனமே, தேவர்கள் அமிழ்தம் உண்பதற்காக மோகினி அவதாரம் கொண்டவனை; சுக்கிரீவனுக்கு உதவி செய்ய மராமரங்களை துளையிட்டவனை; மண்ணுருண்டை அம்பு எயிது கூனியின் கூன் நிமிரச் செய்தவனை; தந்தையின் சொல்லைத் தட்டாது நின்றவனை; பன்றி அவதாரம் கொண்டவனை; சூரியனாக இருப்பவனை; நீ நினைப்பாயாக.

மனதாலும் உடலாலும் வருத்து கின்ற - இயங்குமின்
துன்பம் போக்கிடும் வழிமுறை அறியா - இயங்குமின்
நின்ற காலத்து நான்கண்டேன் நாராயணா - இயங்குமின்
எனும்நாமம் அதைநாளும் உச்சரிக்க இதயமேநீ - இயங்குமின் 06

இதயமே, மனதாலும் உடலாலும் வருகின்ற துன்பங்களைப் போக்கும் வழிமுறைகள் அறியாது இருந்த காலத்தில், அத்துன்பத்தைப் போக்க நான் கண்ட சொல் நாராயணா என்னும் பெயர். அதனை ஒவ்வொரு நாளும் உச்சரிக்க நீ நன்றாக இயங்குவாயாக.

மீனோடு ஆமை ஏனம் நரஅரி - தொழுமின்
வானளந்த வாமனன் பரசு ராமன் - தொழுமின்
கானகம்  நடந்த ராமன் பலராமன் - தொழுமின்
தேன்குழல் கிருட்டிணன் ஏனையோன் கைகளே - தொழுமின் 07

கைகளே, மீனாக, ஆமையாக, பன்றியாக, நரசிங்கமாக, வாமனனாக, பரசுராமனாக, இராமனாக, பலராமனாக, கிருட்டிணன், அன்னம், மோகினி முதலான அவதாரம் செய்தவனை இணைந்து வணங்குங்கள்.

மண்ணை உண்டானை வில்லை ஒடித்தானை - சுமப்பீர்
பெண்ணா கிவந்தானை வேள்வி காத்தானை - சுமப்பீர்
கண்ணீர்த் துடைத்தானை பூமி மீட்டானை - சுமப்பீர்
விண்ணை அளந்தகுற ளானை தோள்களேநீர் - சுமப்பீர் 08

தோள்களே, பரம்பொருள் தான் என்பதைக் காட்ட மண் உண்டவனை; சீதைக்காக வில் ஒடித்தவனை; சிவனைக் காக்க பெண்ணாக வந்தவனை; குருவின் வேள்வி காத்தவனை; சுக்ரீவனின் கண்ணீரை நீக்கியவனை; பூமியை மீட்டுத் தந்தவனை; விண்ணை அளந்த வாமனனை; நீர் சுமந்திடுவீர்.

அடுக்கடுக்காய் கொல்லவரும் அரக்கர்கள் மாய்த்தவன் - நடமின்
விடுகின்ற அம்பெய்தி தாடகைவதம் செய்தவன் - நடமின்
சட்டைபோன்று தோல்கழற்றும் பாம்பணையில் துயின்றவன் - நடமின்
இடையனவன் உறைகின்ற பதிநோக்கி கால்களே - நடமின் 09

கால்களே, கோகுலத்தில் தன்னைக் கொல்வதற்கு அடுத்தடுத்து வந்த அரக்கர் கூட்டத்தை மாய்த்தவன். அம்புகளை எய்து தாடகை என்ற பெரிய அரக்கியை கொன்றவன். சட்டைத்துணி போன்று தன்னுடைய தோலைக் கழற்றும் இயல்புடைய பாம்பணையில் பள்ளிகொண்டவன். இடையர்களின் குலவிளக்காம் திருமால் உறைகின்ற இடங்கள் நோக்கி நடந்து செல்லுங்கள்.

முக்கோலம் கொண்டவனாம் மூவுலகும் ஆள்பவனாம் - வலம்வருக
சிக்காமல் வானவரை நன்முறையில் காப்பவனாம் - வலம்வருக
தக்கதொரு காலத்தில் குறைபலவும்  தீர்ப்பவனாம் - வலம்வருக
சக்கரம் கைக்கொண்டோன் ஊர்சென்று  உடம்பேநீ - வலம்வருக 10

உடம்பே, நின்ற, இருந்த, அமர்ந்த கோலங்களில் காட்சி தருபவன். வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் ஆகிய மூன்றையும் ஆள்பவன். பகைவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் தேவர்களைக் காப்பவன். வணங்குபவரின் குறைகளைத் தகுந்த காலத்தில் போக்குபவன். சக்கராயுதத்தைக் கையில் தாங்கியவன. அவன் இருக்கும் ஊர்களுக்குச் சென்று நீ வலம்வருக.

#மணிவண்ணன்_திருஅங்கமாலை
#rettanainarayanakavi

No comments:

Post a Comment